Skip to main content

அரசு ஊழியர்களின் 12 லட்சம் ஓட்டுகள் அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக?

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

"அரசு ஊழியர்களின் 12 லட்சம் ஓட்டுகள் அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக இருக்கும் என்பதால் தபால் ஓட்டுகள் போடுவதையே தடுத்துக்கொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம்' என்ற பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இதுகுறித்து, நாம் விசாரிக்க ஆரம்பித்தபோது... தமிழகத்தில் சுமார் 13 1/2  லட்சம் அரசு ஊழியர்கள் இருக்கிறார்கள். கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், மருத்துவசிகிச்சையில் இருப்பவர்கள், ஓய்வுபெற்றவர்கள்  தவிர்த்து சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள் வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபடுகிறார்கள்.  இவர்களுக்கு,  தபால் ஓட்டுகள் வழங்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை சுமார் 4 லட்சம் அரசு ஊழியர்களின்  தபால் ஓட்டுகளைதான் பதிவுசெய்திருக்கிறது தேர்தல் ஆணையம். 50,000 அரசு ஊழியர்களுக்குதான் இ.டி.சி. எனப்படும் எலக்ஷன் ட்யூட்டி சர்டிஃபிகேட் கொடுத்து அதே தொகுதியில் வாக்களிக்கும் சான்றிதழை கொடுத்திருக்கிறார்கள். மீதமுள்ள 7 1/2  லட்சம் தபால் ஓட்டுகளுக்கு அனுமதி வழங்காமல் இருப்பதால்தான் இப்படியொரு  பலத்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

 

letter vote


 

vote



இதுகுறித்து, தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின்  தலைவரும் நாடாளுமன்றத் தொகுதி வாக்குச்சாவடி தலைமை அலுவலருமான இளமாறனிடம் நாம் பேசியபோது, "வாக்குச்சாவடி தலைமைத் தேர்தல்  அலுவலர்,  தேர்தல் அலுவலர்-1, தேர்தல் அலுவலர்-2, தேர்தல் அலுவலர், -3, தேர்தல் அலுவலர்- 4 என  ஒரு வாக்குச்சாவடிக்கு 5  அரசு ஊழியர்கள் பணியமர்த்தப் படுகிறார்கள். அப்படி, பணியமர்த்தப்படும்போது அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டுகள் வழங்கப்படவேண்டும். ஆனால், 7 1/2 லட்சம் பேருக்கு இன்னும் தபால் ஓட்டுப்போடுவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.  பணியில் அமர்த்தப்பட்ட நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டே அரசு ஊழியரின் ஓட்டும்  இருந்தால் அவர் 12 ஏ ஃபார்ம் பூர்த்திசெய்து கொடுத்துவிட்டு இ.டி.சி. சான்றிதழ் பெற்று எலக்ட்ரானிக் ஓட்டுமெஷினிலேயே ஓட்டுபோட்டுவிடலாம். ஆனால், வேறு தொகுதியில் இருந்தால் 12 ஃபார்ம் எனப்படும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தபால் ஓட்டு போடவேண்டியிருக்கும். 

 

letter vote



கடந்த மார்ச் 24-ந் தேதி நடந்த தேர்தல் பயிற்சியின் முதல் வகுப்பிலேயே  12, 12ஏ ஃபார்ம்கள் பூர்த்திசெய்து கொடுத்திருந்தோம். ஆனால், இரண்டாவது தேர்தல் பயிற்சி வகுப்பின்போது பல பேர்களுக்கு வாக்குச்சீட்டுகள் வழங்கப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டபோது, மீண்டும் 12, 12ஏ ஃபார்ம்கள் பூர்த்திசெய்து கொடுக்கச் சொன்னார்கள். அப்போது,  அடுத்த தேர்தல் வகுப்பான 13- ந்தேதி தபால் ஓட்டிற்கான வாக்குச்சீட்டுகளும் பணிபுரிகின்ற இடம் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்டிருந்தால் பணிபுரியும் இடத்திலேயே ஓட்டு மெஷின் (ஊயங) மூலம் வாக்களிக்க இ.டி.சி. சான்றிதழ் வழங்கப்படும் என்றார்கள். ஆனால், 13-ந் தேதி சொற்ப எண்ணிக்கையிலே வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டிற்கான வாக்குச்சீட்டுகளும் ஊஉஈ சான்றிதழ்களும் வழங்கிட தமிழ்நாடு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 

letter vote



அரசு ஊழியர்களின் உயரதிகாரிகள் மூலமே வாக்குச்சீட்டுகளை தேர்தல் ஆணையம் விரைவாக விநியோகித்துவிடலாம். உதாரணத்துக்கு, 2 1/2  லட்சம் ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் சீலிட்ட கவரில் அனுப்பி வாக்குச்சீட்டுகளை விநியோகித்துவிட்டால் 100 சதவீத ஆசிரியர்கள் ஓட்டுப் போட்டுவிட முடியும். இதேபோல், ஒவ்வொரு அரசு ஊழியரின் தலைமை அதிகாரியின் மூலம் விநியோகித்தாலே அரசு ஊழியர்களின் 100 சதவீத ஓட்டுகளை பதிவு செய்துவிடலாம்'' என்றார். 

பெயர் விரும்பாத ஜாக்டோ ஜியோ போராட்ட நிர்வாகி நம்மிடம், "2016 தேர்தலில் சில டெக்னிக்கல் காரணங்களைச் சொல்லி 23,000 தபால் ஓட்டுகளை செல்லாத ஓட்டு என்று அறிவித்துவிட்டார்கள். இந்த வருடம் அரசு ஊழியர்களை ஓட்டுப்போட விடாமல் செய்தால், தி.மு.க. கூட்டணிக்கான ஓட்டுகளைத் தடுத்துவிடவேண்டும் என்ற நோக்கத்தில் இப்படிச் செய்கிறார்கள்'' என்று குற்றஞ்சாட்டுகிறார்.

இதுகுறித்து, சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ரங்கபிரசாத்திடம் நாம் கேட்டபோது, ""தபால் ஓட்டுகள் போடுவதில் இப்படியொரு குளறுபடி ஏற்பட்டதே இல்லை. தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததாலும், அரசின் அடக்குமுறையாலும் அரசு ஆசிரியர்கள் அ.தி.மு.க. மீது கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள். அதனால்தான் அரசுப்பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்று அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கையே வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டாலும்கூட வாக்குச்சீட்டு கொடுக்காமல் தாமதிப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் ஒரு அமைச்சர் முன்னிலையிலேயே தபால் ஓட்டுகள் போடப்பட்டது தேர்தல் ஆணையத்தின்மீதான நம்பகத்தன்மையையே உடைத்துவிட்டது.  மேலும், அரசு ஊழியர்களுக்கு பதிலாக தேர்தல் நடத்தும் ஆட்களை அவுட் சோர்ஸிங் மூலம் எடுக்க ஆரம்பித்திருப்பது அரசு ஊழியர்கள் மீது தேர்தல் ஆணையத்திற்கு நம்பிக்கை இல்லையோ என்ற கேள்வியை எழுப்புகிறது'' என்று குற்றஞ்சாட்டுகிறார். வாக்கு எண்ணிக்கை நாளான மே 23 வரை தபால் ஓட்டுகளை அளிக்க முடியும் என்பதால் அதில் முடிந்த அளவு குளறுபடி செய்ய நினைக்கிறது ஆளுந்தரப்பு.