"உங்களுக்கு பிடிச்ச படம் எதுங்க?"
"இன்டெர்ஸ்டெல்லார்"
"ஏங்க இன்ட்ரஸ்ட் இல்ல?"
"ஷூர் (sure) ...வேணுமா?
"சோறெல்லாம் வேணாங்க"
இதுபோன்ற நகைச்சுவை வசனங்கள் (?) ஒரு ஐம்பதை தாங்குபவர்களுக்கு, ரசிப்பவர்களுக்குத் தான், "ஏன்டா தலையில எண்ண வெக்கல?" படம். டீசர் வெளிவந்த பொழுது கவனிக்க வைத்த படம் எப்படி இருக்கிறது.
என்ஜினியரிங் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞன் பிரவீன் (அஸார்). சில ஆண்டுகள் மூத்த நண்பருடன் சேர்ந்து ஊரை சுற்றும் அவர், நல்ல வேலையில் இருக்கும் அழகான பெண்ணான நாயகி சஞ்சிதா ஷெட்டியைக் கண்டதும் காதல் வந்து, அவர் மூலமாகவே தனக்குப் பிடித்த நல்ல வேலையில் சேர்ந்து, திருமணமாக நிகழ இருக்கும் நிலையில், ஒரு எதிர்பாராத சோதனை. எமதர்மராஜன், குலுக்கல் முறையில் இவரைத் தேர்ந்தெடுத்து, 'நான் கொடுக்கும் நான்கு டாஸ்க்குகளைநீ முடித்தால் தான் உயிரோடு விடுவேன்" என்று சொல்ல, டாஸ்க்குகளை வெற்றிகரமாக முடித்தாரா, திருமணம் நடந்ததா என்பதே கதை.
படத்தின் கதை வேலையில்லாத என்ஜினியர் நாயகனைப் பற்றியது என்றாலும், அத்தனை திறமையும் இருந்தும் அவனுக்கு வேலை கிடைக்கவில்லை என்று காட்டாமல் உண்மை நிலவரத்தைக் காட்டியது ஆறுதல். பெரும்பாலும் வசனங்களாகவே எழுதப்பட்டிருக்கும் நகைச்சுவைகளில் ஆங்காங்கே சில நம்மை சிரிக்க வைக்கின்றன. இரண்டாம் பாதியில் வரும் யோகி பாபு பகுதியில் அரங்கு சிரிக்கிறது. ஆனாலும், அதுவும் ஆரோக்கியமான நகைச்சுவையாக இல்லை.
சின்னத்திரை மிமிக்ரியில் புகழ் பெற்ற திறமைசாலியான அஸாருக்கு பெரிய திரையில் முதல் படம். அவர் ஓரளவு நன்றாக நடித்திருந்தாலும், மிமிக்ரி கலைஞர்களுக்கே உரிய சவாலானது இவரையும் சோதிக்கிறது. ஆங்காங்கே தெரியும் விஜய் சாயல் துருத்திக்கொண்டு இருக்கிறது. அதைக் கடக்க வேண்டும் அவர். சஞ்சிதா ஷெட்டி, வழக்கமான நாயகி பாத்திரத்தைத் தாண்டி பெரிதாக வேலையில்லை என்பதால், அதற்கேற்ப வந்து போகிறார். நண்பனாக வரும் சிங்கப்பூர் தீபன், காமெடி கவுண்டர்கள் கொடுத்து சிரிக்கவைக்க முயன்றிருக்கிறார், பெரிதாக வேலை செய்யவில்லை. ஒரு காட்சியில், சிம்புவின் குரலில் இரட்டை அர்த்தமாக பேசும் ஒருவருக்கு 'பங்க்சுவாலிட்டி பரமசிவம்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். என்ன காரணமோ?
படத்தின் கதை தொடங்கும் இடம், இடைவேளைக்கு சற்று முன் வருகிறது. அங்கு ஏற்படுத்திய ஆர்வத்தை வெகு விரைவிலேயே கரைய வைத்துவிடுகின்றன அடுத்து வரும் காட்சிகள். நாயகனுக்கு எமனால் கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளில், பாட்டியிடம் அடி வாங்க வேண்டுமென்பது மட்டும் சுவாரசியம். மற்றவை ம்...ஹ்ம்ம்... படம் முழுவதிலும் தெரியும் நாடகத்தன்மை, சின்ன பட்ஜெட் படம் என்ற உணர்வு இரண்டும் எதிர்மறையாக வேலை செய்கின்றன. 'லென்ஸ்' போன்ற படங்களும் குறைந்த செலவில் எடுக்கப்பட்டவையே. தொழில்நுட்ப சமாதானங்கள் படத்தை பாதிக்கின்றன. ஏ.ஆர்.ரெஹைனாவின் பின்னணி இசை சற்று ஓவர் டோஸ். பாடல்கள் படத்தோடு கடந்து செல்கின்றன.
ஒரு கட்டத்தில் வாட்ஸ்-அப்பில் வலம் வந்த எழில்-க்ளாட்வின்-கௌரி கதையை காமெடியாக வைத்துள்ளார்கள். ட்ரெண்டிங் விஷயங்கள் பலவற்றையும் படத்தில் சேர்த்த கவனத்தை ட்ரெண்டில் இருக்கும் பாணியில் காமெடி வைக்கவும் செலுத்தியிருக்கலாம்.