Skip to main content

இது திரைப்படமா, இல்ல திருவிழாவா? நம்ம வீட்டுப் பிள்ளை - விமர்சனம்

Published on 28/09/2019 | Edited on 02/10/2019

"நம்மள மாதிரி பசங்க ஒரு தடவ ஜெயிச்சா ஒத்துக்கமாட்டாய்ங்க, ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கணும், ஜெயிப்போம்" என்று பன்ச் பேசும் மனநிலைக்கு சிவகார்த்திகேயனை சில தோல்விகள் தள்ளியிருக்கும் வேளையில், அவரை சினிமாவுக்குக் கொண்டு வந்த இயக்குனர் பாண்டிராஜுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார். இந்த முறை ஜெயித்துவிட்டாரா?

 

sivakarthikeyan



திரைப்படமா இல்லை திருவிழாவா என்று எண்ண வைக்கும் வகையில் இத்தனை நட்சத்திரங்களை சேர்த்து அவர்கள் அத்தனை பேருக்கும் கதாபாத்திரங்கள், அவர்களுக்கான சுவாரசியமான சுபாவங்கள் எழுதி நம் மனதில் நிற்க வைப்பதில் தேர்ந்தவர் இயக்குனர் பாண்டிராஜ். அவரது கடந்த படமான 'கடைக்குட்டி சிங்கம்' பெரும் வெற்றி பெற இதுவும் ஒரு மிகப்பெரிய காரணம். 'கடைக்குட்டி சிங்கம்' வெற்றி தந்த உற்சாகத்தில் மீண்டும் அதே ஃபார்முலாவில் எடுக்கப்பட்டுள்ள படம் 'நம்ம வீட்டுப் பிள்ளை'. இந்த ஃபார்முலாவில் என்னவெல்லாம் இருக்கின்றன? நிறைய உறவுகள் கொண்ட பெரிய குடும்பம், வித விதமான பாத்திரங்கள், அதில் அனைவரையும் இணைக்கக்கூடிய மையமாக நாயகன், உறவுகளுக்குள் உள்ள மகிழ்ச்சி, கசப்பு, ஒரு பிரச்சனை, விரிசல், பின் நெகிழ்ச்சியான கிளைமாக்ஸ்... இதுதான் அந்த ஃபார்முலாவின் முக்கிய அங்கங்கள். இவை அனைத்தும் மிஸ் ஆகாமல் சேர்த்திருக்கிறார் பாண்டிராஜ். ஆனால், ரிசல்ட் மிஸ் ஆகாமல் இருக்கிறதா?


நாயகன் அரும்பொன் (சிவகார்த்திகேயன்), தங்கை துளசி (ஐஸ்வர்யா ராஜேஷ்) இருவரும் 'பாசமலர் வெர்ஷன் 2' உடன்பிறப்புகள். சிறு வயதிலேயே தந்தையை இழந்து தாயுடன் வாழும் இவர்கள், தாத்தா அருள்மொழிவர்மனின் (பாரதிராஜா) ஆதரவுடன் சுற்றியுள்ள பெரியப்பா, சித்தப்பா, மாமா ஆகியோரது பாசத்தை எதிர்பார்த்து வாழ்பவர்கள். இவர்களின் நேசத்துக்கு இணையாக இவர்களை நேசிப்பது தாத்தாவும் பெரியப்பா மகன் பரமுவும் (சூரி) மட்டுமே. மற்றவர்களுக்கு என்ன வெறுப்பு, அதன் விளைவு என்ன, மீண்டும் எப்படி இணைகிறார்கள் என்ற கதையை காமெடிக்கும் சென்டிமெண்டுக்கும் அதிக இடத்தைக் கொடுத்து படமாக உருவாக்கியுள்ளார் பாண்டிராஜ். காமெடி, செண்டிமெண்ட் இரண்டுமே பெரும்பாலும் ஒர்க்-அவுட் ஆகியிருப்பது படத்தின் பலம். அதிலும் சூரியின் நகைச்சுவை திறமை பாண்டிராஜ் - சிவகார்த்திகேயன் ஆகியோருடன் இணையும்போது மிக சிறப்பாக வெளிப்படுகிறது. (சூரியின் டைமிங்கை கிண்டல் செய்யும் காட்சி படத்திலேயே உண்டு) சூரியின் மகன் பாத்திரத்தில் நடித்துள்ள இயக்குனர் பாண்டிராஜின் மகன், ஒவ்வொரு வசனத்திலும் அரங்கை சிரிப்பால் அதிர வைக்கிறார். கிராமங்களில் இருக்கும் சேட்டைக்கார சின்னபையன்களை மிக அழகாக, துடுக்காகப் பிரதிபலிக்கிறார்.

 

 

barathiraja

 

100 love



கஞ்சத்தனம் மிகுந்த சித்தப்பா, இருமி இருமி மகளை கண்ட்ரோல் பண்ணும் மாமா, வித்தியாசமாக சிரிக்கும் மச்சான், ஸ்கைப்பில் மட்டுமே மனைவியுடன் பேசும் கணவன் என உறவுக் கூட்டத்தின் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் சுவாரசியம் சேர்க்க முயன்றுள்ளார் பாண்டிராஜ். ஆனாலும் பார்ப்பவர்கள் மனதில் இடம்பிடிக்கும் பாத்திரங்கள் வெகு சில மட்டுமே. செல்ஃபோன்களுக்கும் பாண்டிராஜ் திரைப்படங்களுக்கும் நல்ல உறவு உண்டு. இந்தப் படத்திலும் அது தொடர்கிறது. அதிலும் ஒரு கான்ஃபரன்ஸ் கால் காட்சி பெரும்பாலானோரை சிரிக்க வைக்கிறது. 'பெரிய சந்தோசத்தை தருவதும் சொந்தம்தான், துயரத்தை தருவதும் சொந்தம்தான்', 'சொந்தங்கள்ட்ட தோத்துப் பழகுனவனை யாராலும் தோற்கடிக்க முடியாது' மற்றும் சிவகார்த்திகேயன் பாத்திரம் அப்பா குறித்துப் பேசும் வசனம் போன்ற உறவுகள் குறித்த வசனங்கள் அதிக செண்டிமெண்ட் போலத் தோன்றினாலும் அனைவரும் உணரக்கூடியவையாக இருக்கின்றன. இவையெல்லாம் படத்தின் பலமாக இருக்க, படத்தின் முக்கிய பாத்திரமாக இருக்கும் தங்கை துளசியின் வாழ்க்கை லட்சியம், அதி அவசர தேவை ஒரு திருமணம் மட்டுமே என்பது போல, ஒவ்வொரு காட்சியிலும் அவரது திருமணம் குறித்து அவரே பேசுவதும் அதற்காக அவரே பிறரை அணுகுவதும் போல அமைத்தது அந்தப் பாத்திரத்துக்கும் படத்துக்கும் பலவீனம். நாயகி வரும் காட்சிகள் படத்திற்கு நேரடியான அவசியமற்றதாக அமைந்துள்ளதும் பலவீனம். படத்தின் மைய பிரச்சனை அவ்வப்போது மாறுவதும் படத்தோடு ஒன்றுவதை தடுக்கிறது. 'கடைக்குட்டி சிங்கம்' போலவே இதிலும் வில்லன் பாத்திரங்கள் நகைப்புக்கு உரியதாக இருக்கின்றன.

 

aiswarya rajesh



சிவகார்த்திகேயன், தனது கலகல நடிப்பால், ஆட்டத்தால், துறுதுறுப்பால் ஈர்க்கிறார். சூரி மற்றும் அந்த சிறுவனுடன் இணைந்து அடிக்கும் டைமிங் காமெடி, ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு சிறப்பான சிவகார்த்திகேயனை நம் முன் கொண்டு வந்திருக்கிறது. காமெடி மட்டுமல்லாமல் செண்டிமெண்ட் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். ஆனால், உங்கள் முன்னோர்களைப் போலவே துரோக பன்ச், வெற்றி தோல்வி பன்ச்கள் உங்களுக்கும் தேவையா சிவா? ஐஸ்வர்யா ராஜேஷ், மிக இயல்பாக நடித்து நம்ம வீட்டுப் பொண்ணாக மனதில் இடம் பிடிக்கிறார். பாரதிராஜா, சமுத்திரக்கனி, ஆடுகளம் நரேன், யோகி பாபு, சண்முகராஜன், சுப்பு பஞ்சு, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட சிறப்பான நடிகர்களும் அளவாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். நட்டி (எ) நடராஜன், எதிர்மறை பாத்திரத்தில் தனக்குக் கிடைத்த இடத்தை சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளார். அவரது தோற்றமும் குரலும் நேட்டிவிட்டி நிரம்பியிருக்கின்றன. நாயகி அனு இம்மானுவேல் அழகாக இருக்கிறார். ஆனால் அந்த அழகை மட்டும் எவ்வளவு நேரம் பார்ப்பது?


இமானின் பாடல்கள் படத்தின் கொண்டாட்டத்தை கூட்டியிருக்கின்றன, பின்னணி இசை சோகத்தை சுரந்திருக்கிறது. இப்படி ஒரு படத்தில் நிரவ் ஷா என்ன செய்கிறார் என்ற எண்ணத்தை 'ஒளிப்பதிவு நிரவ் ஷா' என்ற டைட்டில் க்ரெடிட் உண்டாக்கியது. ஆனால், தனது பணியை நிறைவாகச் செய்து காட்சிகளை தரமாகத் தந்துள்ளார் அவர். ரூபன், சில காட்சிகளை இன்னும் இறுக்கமாகத் தொகுத்திருக்கலாம்.

உறவுகளுடன் ஊர் திருவிழாவுக்குச் சென்றதைப் போன்ற உணர்வை படம் தருகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் - பாண்டிராஜ் கூட்டணி ஜெயித்துவிட்டது, ஃபார்முலாவுக்கான ரிசல்ட் ஓரளவு வெற்றிகரமாக வந்துள்ளது. ஆனால், கையோடு எடுத்த வர நல்ல நினைவுகள் எதையும் பெரிதாகத் தரவில்லை.

 

                

                      

சார்ந்த செய்திகள்