வாலு, ஸ்கெட்ச் படங்கள் மூலம் கவனிக்கத்தக்க இயக்குநர் பட்டியலில் இணைந்த விஜய் சந்தர், முதல்முறையாக தயாரித்திருக்கும் திகில் திரைப்படம் கார்டியன். தமிழ் சினிமாவில் மார்க்கெட் இழந்த பிறகு நடிகைகள் கதையின் முதன்மைப் பாத்திரமாக நடிக்கும் பாணியை பின்பற்ற ஆரம்பிப்பார்கள். அந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கும் முன்னாள் முன்னணி நடிகை ஹன்சிகா மோத்வானி. விஜய் சந்தர் முதல்முறையாக தயாரித்திருக்கும் இப்படத்தில் கதையின் முதன்மைப் பாத்திரமாக களம் இறங்கி இருக்கிறார். இந்த புதிய கூட்டணி வெற்றிக்கனியை பறித்ததா, இல்லையா?
சிறுவயதிலிருந்தே அதிர்ஷ்டம் இல்லாத நபராக வளர்கிறார் நாயகி ஹன்சிகா மோத்வானி. இவர் தொட்ட காரியம் எதுவும் துலங்கவும் இல்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் ஹன்சிகா வேலை தேடி சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில் அவருக்கு ஒரு ரத்த காவு வாங்கும் படியான ஒரு சிறிய விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தின் மூலம் அவருக்கு ஒரு சக்தி கிடைக்கிறது. இதுவரை அதிர்ஷ்டமே இல்லாமல் வளர்ந்து வந்த ஹன்சிகா, இனி அவர் நினைக்கும் அனைத்து விஷயங்களும் அப்படியே நடக்கும் படியாக சக்தி அவருக்கு கிடைக்கிறது. இதை வைத்துக்கொண்டு அவர் நினைக்கும் காரியத்தை வெற்றிகரமாக முடிக்கிறார். அவருக்கு நினைத்த வேலையும் கிடைத்து விடுகிறது. வாழ்க்கையும் சந்தோஷமாக செல்லும் நேரத்தில் எதிர்பாராத விதமாக ஹன்சிகாவுக்கு பாதகமான சில விஷயங்களில் அந்த சக்தியால் நடக்கிறது. அதன் பின் அவருக்கு பேய் பிடித்து விடுகிறது. இதையடுத்து இந்த சக்தியால் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகும் ஹன்சிகா அதிலிருந்து மீண்டாரா, இல்லையா? அவருக்கு கிடைக்கும் சக்திக்கு பின்னால் இருக்கும் கதை என்ன? பேயிடம் இருந்து அவர் விடுபட்டாரா, இல்லையா? என்பது கார்டியன் படத்தின் மீதி கதை.
தமிழ் சினிமாவில் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய அதே அரதப்பழசான பேய் கதையை கொண்ட பட பட்டியலில் இந்த படமும் இணைந்து இருக்கிறது. ஒரு அப்பாவி நபரை வில்லன்கள் சில காரணங்களுக்காக போட்டு தள்ளி விடுகின்றனர். அந்த அப்பாவி பெண் எப்படி பேயாக மாறி தன்னை கொலை செய்தவர்களை பழி வாங்கினார் என்ற ஏற்கனவே பல ஆண்டு காலமாக அடித்து துவைத்த கதையை வைத்துக் கொண்டு அதில் திகில் காட்சிகளை உட்புகுத்தி அதன்மூலம் பயமுறுத்தி ரசிகர்களை ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர்கள் சபரி - குரு சரவணன். படத்தின் முதல் பாதி ஹன்சிகாவுக்கு தொட்டது எதுவும் துலங்காமல் ராசி இல்லாத நபராக அவர் படும் துன்பங்களை அழகாக காட்சிப்படுத்தி அதன் மூலம் ரசிக்க வைத்த இயக்குநர்கள் இரண்டாம் பாதியில் பேய் கதையை உள்ளே கொண்டு வந்து கிளிஷேவான காட்சிகள் மூலம் அயற்சி உடன் கூடிய படமாக இப்படத்தை கொடுத்து முடித்திருக்கிறார். முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதி எங்குமே புதியதாக எதுவும் இல்லாமல் மிகவும் பிளாட்டாக சென்று முடிகிறது. பேய் அல்லாத முதல் பாதி ஓரளவு ரசிக்கக்கூடியதாக அமைந்து படத்தை தாங்கிப் பிடிக்க முயற்சி செய்து இருக்கிறது. பேய் படத்துக்கே உரித்தான பயமும் பயங்கரமும் அதிரி புதிரியாக இல்லாமல் உப்பு சப்பு இன்றி இருப்பது படத்திற்கு சற்று மைனஸ் ஆக அமைந்திருக்கிறது.
படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹன்சிகா மோத்வானி அவருக்கான வேலையை செவ்வனே செய்து விட்டு சென்றிருக்கிறார். தனக்கு என்ன வருமோ அந்த நடிப்பை நிறைவாக கொடுத்து காட்சிகளுக்கு உயிரூட்ட முயற்சி செய்து விட்டு சென்று இருக்கிறார். இந்த படத்திற்கு இவருடைய ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் சற்று பிளஸ்ஸாக அமைந்திருக்கிறது. வழக்கமான வில்லன்களாக வரும் சுரேஷ் மேனன், ஸ்ரீமன், அபிஷேக் வினோத், ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோர் வழக்கமான வில்லத்தனம் காட்டி பயமுறுத்த முயற்சி செய்திருக்கின்றனர். காமெடிக்கு பொறுப்பேற்று இருக்கும் மொட்டை ராஜேந்திரனும், டைகர் கார்டன் தங்கதுரையும் அவ்வப்போது சிரிப்பு காட்ட எவ்வளவோ முயற்சி செய்தும் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. படத்தின் நாயகனாக வரும் பிரதீப் ராஜன் கடமைக்கு வந்து செல்கிறார். ஃபிளாஷ் பேக் காட்சியில் வரும் நடிகையும், குழந்தையும் தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர்.
சக்திவேல் ஒளிப்பதிவில் பேய் சம்பந்தப்பட்ட காட்சிகள் தவிர்த்து மற்ற காட்சிகள் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சாம் சி எஸ் இசையில் பாடல்கள் வழக்கம் போல் சுமார். பின்னணி இசை எப்போதும் போல் வெறும் இரைச்சல் ஆன சத்தம் மட்டுமே கேட்கிறது. ஹன்சிகா போன்று முன்னணி நடிகையை வைத்துக்கொண்டு படத்தை எடுக்கும் இயக்குநர்கள் வழக்கமான கதை அமைப்புகள் இல்லாமல் வித்தியாசமான முயற்சியில் ஈடுபடும் பட்சத்தில் அவை வெற்றிக்கனியை பறிக்கத் தவறியதில்லை. ஆனால் வழக்கமான கதை அமைப்புகளை வைத்துக்கொண்டு, வழக்கமான காட்சி அமைப்புகளோடு கொடுக்கும் படங்கள் பெரும்பாலும் சோடை போவதில்லை. இதில் கார்டியன் இரண்டாவது ரகம்.
கார்டியன் - உப்பு சப்பு குறைவு!