இதற்கு முன் ஓடிடியில் வெளியான தனுஷ் படமான அத்ராங்கி ரே (கலாட்டா கல்யாணம்) படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனாலேயே மீண்டும் ஓடிடியில் வெளியாகும் மாறன் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பை தற்போது ரிலீசாகியுள்ள மாறன் படம் பூர்த்தி செய்ததா...?
முன்னாள் அமைச்சர் சமுத்திரகனி இடைத்தேர்தலில் வெற்றி பெற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஊழல் செய்கிறார். இதைக் கண்டுபிடிக்கும் நேர்மையான பத்திரிகையாளரான தனுஷ், அதை உலகுக்கு அம்பலப்படுத்துகிறார். இதற்கிடையே தனுஷ் தங்கையான ஸ்மிருதி வெங்கட் கடத்தப்பட்டு உயிரோடு எரித்து கொலை செய்யப்படுகிறார். தனுஷுக்கு சமுத்திரக்கனி மேல் சந்தேகம் ஏற்பட இந்த கேசை அவரே கையிலெடுத்துத் துப்பு துலக்குகிறார். இறுதியில் உண்மையான குற்றவாளியை தனுஷ் கண்டுபிடித்துத் தண்டித்தாரா, இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
துருவங்கள் பதினாறு, மாபியா போன்ற டீசன்டான திரில்லர் படங்களைக் கொடுத்து கவனம் ஈர்த்த கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம். இதுவே மாறன் படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அந்த எதிர்பார்ப்பை சுக்குநூறாக உடைத்துள்ளார் இயக்குநர். இப்படி ஒரு அரதப்பழசான கதையை அவர் எப்படித் தேர்ந்தெடுத்தார் என்பதும், இந்தப் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க எப்படி ஒத்துக் கொண்டார் என்பதும் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. அந்த அளவு ஒரு முதிர்ச்சியற்ற கதையாடல் கொண்ட படமாக இது அமைந்துள்ளது. ஒரு நார்மலான இன்வெஸ்டிகேட்டிவ் கதையில் தங்கை செண்டிமெண்ட் கலந்து கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர். அது பல இடங்களில் வொர்க் அவுட் ஆகாமல் போனது படத்துக்குப் பெரிய பாதகமாக அமைந்துள்ளது. அதுவும் படம் ஆரம்பித்ததிலிருந்து அடுத்து ஏதோ நடக்கப்போகிறது பொறுத்திருந்து பார்ப்போம் என்ற எண்ணத்திலேயே மொத்த படமும் கழிந்து விடுகிறது. இதுவே படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக அமைந்து படத்தைக் கரைசேர்க்க மறுத்துள்ளது. தனுஷ், கார்த்திக் நரேன் கூட்டணியில் இப்படி ஒரு படத்தை எந்த ஒரு ரசிகரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
நடிப்பில் பட்டையைக் கிளப்பி மெய்சிலிர்க்க வைக்கும் தனுஷ் இந்த படத்தில் சற்று அடக்கியே வாசித்து இருக்கிறார். எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு நடிப்பு போதுமோ அதை அளவாகச் செய்து கடந்துள்ளார். வழக்கமான ஹீரோயினாக வரும் மாளவிகா மோகனன் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்திச் சென்றுள்ளார். இவரது கதாபாத்திரம் படத்திற்கு எந்த ஒரு இடத்திலும் உதவி புரிந்ததா என்றால், இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. எங்கு மாளவிகா மோகனன் வசன உச்சரிப்பில் ஏதாவது பிழை ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணத்தில் படம் முழுவதும் அவர் வாயில் ஒரு சூயிங் கம் போட்டு மென்று கொண்டே பேசும்படி அவரது கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் கார்த்திக் நரேன். இதில் மட்டுமே அவரது இன்டெலிஜன்ஸ் நன்றாகப் பளிச்சிட்டுள்ளது.
கடமைக்கு வரும் தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஸ்மிருதி வெங்கட். புதிதாக எதையும் ட்ரைசெய்து ரிஸ்க் எடுக்காமல் தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான அண்ணன்-தங்கை உறவு எப்படி இருக்குமோ அதையே ஃபாலோ செய்து, வழக்கமான தங்கையாக நடித்துள்ளார். அதேபோல் வழக்கமான அரசியல்வாதியாக வரும் சமுத்திரகனி, கொடுத்த கதாபாத்திரத்திற்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து கடந்துள்ளார். படத்துக்கு ஒரு ட்விஸ்ட் வேண்டுமே என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் இயக்குநர் அமீர் வந்து செல்கிறார். இவர்கள் எதிர்பார்த்த ட்விஸ்டை இந்த கதாபாத்திரம் கொடுத்ததா என்றால், இல்லை என்று சொல்லத் தோன்றுகிறது. நடிகர் ராம்கி, ஆடுகளம் நரேன் ஆகியோர் அவரவருக்குக் கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்து மனதில் பதியும்படி நடித்துள்ளனர்.
ஜிவி பிரகாஷ் இசையில் சோகப்பாடல் ஓகே மற்ற பாடல்கள் சுமார். சில இடங்களில் மட்டும் பின்னணி இசை படத்தைத் தாங்கி பிடித்துள்ளது. விவேக் ஆனந்த் சந்தோஷம் ஒளிப்பதிவில் படம் கலர்ஃபுல்லாக தெரிகிறது. தனுஷ் மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரின் லுக்கை மிகவும் அழகாகக் காட்டியுள்ளார்.
கேவி ஆனந்த் பட ஸ்டைலில் ஸ்கிரீன்ப்ளேவும், கௌதம் மேனன் பட ஸ்டைலில் கதாபாத்திரங்களும், கார்த்திக் நரேன் பட ஸ்டைலில் சற்று ஸ்டைலிஷான திரில்லர் ஜானரும் கலந்து வெளியாகியுள்ள மாறன் சற்று பெரிய ஏமாற்றம் தான்.
மாறன் - மாத்தி யோசிச்சிருக்கலாம்!