Skip to main content

+2 தேர்வு முடிவுகள்; இணையதள முகவரி வெளியீடு!

Published on 05/05/2024 | Edited on 05/05/2024
+2 exam results; Website address release

தமிழகத்தில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 302 மையங்களில் 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.80 லட்சம் பேர் தேர்வெழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் அடங்குவர்.

மேலும் பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் சுமார் 47 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டனர். தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 4 ஆயிரத்து 200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. அதோடு மாவட்ட ஆட்சியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.  இதனையடுத்து சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதிய தேர்வின் விடைத்தாள் திருத்தும் பணி  கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரை நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நிறைவு பெற்றது. இத்தகைய சூழலில் இந்த பொதுத் தேர்வை எழுதிய அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் எனப் பலரும் முடிவுகளை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருக்கின்றனர். 

+2 exam results; Website address release

அதே சமயம் தமிழ்நாட்டில் வரும் 6 ஆம் தேதி (06.05.2024) பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மார்ச் 2024-ல் நடைபெற்ற 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத்தேர்வு முடிவுகள் 06.05.2024 (திங்கட்கிழமை) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் காலை 09.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை  www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரியில் காலை 9.30 மணிக்கு அறிந்துக்கொள்ளலாம்.

தேர்வர்கள் இந்த இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாணவ-மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏதுவாக பள்ளிகளில் பதிவு செய்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் அனுப்பி வைக்கப்படவுள்ளது. 

சார்ந்த செய்திகள்