Skip to main content

திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை; பக்தர்கள் ஏமாற்றம்!

Published on 05/05/2024 | Edited on 05/05/2024
Ban on bathing in Tiruchendur sea; Devotees disappointed

இந்திய கடல்சார் தகவல் மையம் நேற்று (04.05.2024) பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்திருந்தது. அதில், “காற்றின் போக்கு காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடனும், கடல் அலை சீற்றத்துடனும் இருக்கும். கல்லக்கடல் எனும் நிகழ்வு 4 மற்றும் 5 ஆம் தேதி (05.04.2024) ஏற்படும். கடல் அலை சீற்றத்துடன் இருக்கும். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

விழுப்புரம், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 மாவட்ட கடலோர பகுதிகளில் சிகப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மேலும் கடல் கொந்தளிப்பு மற்றும் கடல் அலை சீற்றம் காரணமாக படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும்படி மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 5 ஆம் தேதி  (05.04.2024) இரவு வரை தென் தமிழக மாவட்டங்களில் 0.5 மீட்டர் முதல் 1.8 மீட்டர் வரை கடல் அலை எழும்புவதற்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடல் சீற்றம் காரணமாக திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலில் இருந்து எழும் அலையின் வேகம் மிக அதிகமாக இருப்பதால் கோயில் நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி கடலில் யாரும் குளிக்க கூடாது என ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர். இத்தகைய சூழலில் கடலில் புனித நீராட தடை விதித்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்