சிபிராஜ், சமுத்திரக்கனி, நட்டி (எ) நடராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வால்டர். அன்பு இயக்கத்தில் ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் படக்குழுவினருடன் விருந்தினராக இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
படத்தில் நடித்துள்ள நட்டி பேசும்பொழுது, மிஷ்கின் குறித்து கலகலப்பாகப் பேசினார். மிஷ்கின், நட்டி இருவரும் நெடுநாள் நண்பர்கள். விஜய் நடித்த 'யூத்' படத்தில் வின்சென்ட் செல்வாவின் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் மிஷ்கின். அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் நட்டி (எ) நடராஜ். இன்று நடராஜ் பாலிவுட்டின் முக்கிய ஒளிப்பதிவாளர். சதுரங்கவேட்டை உள்ளிட்ட பல முக்கிய படங்களில் நடித்துள்ள நடிகர். மிஷ்கின், இன்று தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர். இந்த நிகழ்வில் இவர்கள் இருவரும் ஒருவர் குறித்து ஒருவர் மகிழ்வுடன் பகிர்ந்தனர். நட்டி பேசியது...
"மிஷ்கின் படங்களிலேயே எனக்கு ரொம்பப் பிடிச்சது 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்'. அந்தப் படத்தில் கிட்டத்தட்ட மூன்று நிமிடங்கள் அளவுக்கு ஃபிரேம் முழுவதும் நிறைந்து கேமராவை பார்த்து ஒரு கதை சொல்லியிருப்பார். அதை பார்த்துட்டு, 'இது எப்படிடா பண்ணியிருப்பார். இது எப்படி சாத்தியம்?' என்று நினைச்சுருக்கேன். நான் கண்ணாடி முன்னாடி உக்காந்து அப்படியெல்லாம் பண்ணியும் பாத்துருக்கேன். இப்போதான் தெரியுது, இருட்டுல கூட கருப்புக் கண்ணாடி போட்டுக்கிட்டு தெளிவா நடந்து வராரு. இவராலதான் இது முடியும்னு. இந்த ப்ராக்டிஸ் இருக்கனாலதான் இதெல்லாம் பண்ணுறாரு. பவா சார் (எழுத்தாளர் பவா செல்லத்துரை) சொன்னார் 'மிஷ்கின் ஒரு பிசாசு'ன்னு. ஆமா, பெரிய பிசாசுதான். பக்கத்துல உக்காரும்போது பயமாத்தான் இருந்தது".