
மலையாளத்தில் இயக்குநர் ஜீத்து ஜோசப் - முன்னனி நடிகர் மோகன்லால் கூட்டணியில் 2013ஆம் ஆண்டு வெளியான படம் ‘த்ரிஷ்யம்’. ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்திருந்த இப்படத்தில் மீனா கதாநாயகியாக நடித்திருந்தார். க்ரைம் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமாகத் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது. தமிழில் கமல் நடித்திருந்த நிலையில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்திய மொழி தவிர்த்து வெளிநாடுகளில் சிங்கள மொழியிலும் சீன மொழியிலும் அந்தந்த நாட்டில் வெளியாகியிருந்தது. இதனிடையே இப்படத்தின் இரண்டாம் பாகம் மலையாளத்தில் 2021ஆம் ஆண்டு வெளியானது. நேரடியாக ஓ.டி.டி.யில் வெளியான இப்படம் முதல் பாகத்தை போலவே பெரும் வரவேற்பை பெற்றது. பின்பு கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.
இதையடுத்து ஆங்கிலம், இந்தோனேசியா, கொரியா உள்ளிட்ட மொழிகளிலும் இப்படங்கள் ரீமேக்காவுள்ளதாக அறிவிப்புகள் வந்தது. ஆனால் அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. முதல் இரண்டு பாகங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து மூன்றாம் பாகம் வருமா என்றா கேள்வி ரசிகர்கள் மத்தியில் உலா வந்தது. அதற்கான முயற்சிகளும் படக்குழு மேற்கொண்டதாகத் தகவல் வெளியானது. பின்பு உருவாகவுள்ளதாக பரவலாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மோகன்லால் தனது எக்ஸ் பக்கத்தில், “கடந்த காலம் ஒருபோதும் அமைதியாக இருக்காது” எனத் தெரிவித்து த்ரிஷ்யம் 3 உறுதியாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனையும் ஜீத்து ஜோசப் இயக்க ஆண்டனி பெரும்பாவூரே தயாரிக்கிறார். இதனால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.