ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் க/பெ. ரணசிங்கம் படம் நேற்று ஓடிடியில் ரிலீஸானது. இந்த படத்தில் கௌரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்க, ரங்கராஜ் பாண்டேவும் நடித்துள்ளார். புதுமுக இயக்குனர் விருமாண்டி இயக்கியுள்ள இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில் படத்தின் இயக்குனர் மற்றும் எழுத்தாளர் இருவரும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், “உலகின் ஆகச்சிறந்த அறிவாளி அண்ணன் “நீல சட்டை” மாறன் அவர்களுக்கு,
நாங்கள் எடுத்துக்கொண்ட கதை என்ன என்பதை புரிந்து கொள்ளும் பேராற்றல் படைத்த மகா விஞ்ஞானியான தங்களுக்கு நாங்கள் திரைக்கதையாகவும், காட்சியாகவும் என்ன சொல்லியிருக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள முடியாமல் தங்களின் “பெருமூளை மழுங்கி மட்டையாகி” போனது கண்டு மிகவும் வேதனையடைந்தோம்.
ஒரு பெண் தன் கணவன் மீது எவ்வளவு பெருங்காதல் கொண்டிருப்பாள் என்பதை ஒருசில வார்த்தைகளால் உங்களைப்போல அதிமேதாவித்தனமாக பேசிப்புரியவைக்க முடியாமல், சில காதல் காட்சிகள் மூலம் பார்வையாளர்களுக்கு உணர வைக்க முயன்றதற்கு வருந்துகிறோம். மேலும் காதல் காட்சிகளின் ஊடே கதாநாயகன் என்ன காரணத்திற்காக நீரோட்டம் பார்க்கும் வேலையை செய்யும் விதமாக காட்சியமைத்திருக்கிறோம் என்பதும் உங்கள் “கனமான தலையில்”ஏன் ஏறவில்லை என்று புரியவில்லை.
அண்ணன் அவர்களே வேலைவாய்பின்மை, வறுமை போன்று அரசுகளால் தீர்க்க முடியாத சிக்கல்களை முன்னிட்டே பல நம் இந்திய சொந்தங்கள் அயல் நாடுகளுக்கு வேலைக்கு செல்கிறார்கள்.
இங்கு ஏன் வேலை இல்லை? எதனால் இல்லை? யாரால் இல்லை? என்று சற்று விரிவாகவே நாங்கள் பேசியுள்ளதை நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டு படம் பார்க்கும்போது “குறட்டை விட்டு தூங்கியுள்ளீர்கள்” என்பதை ரணசிங்கம் திரைப்படத்தை விமர்சனம் செய்து தாங்கள் வெளியிட்டுள்ள காணொலியில் சோர்வடைந்து இருக்கும் உங்கள் முகம் மூலம் உணர முடிகிறது” என்று தெரிவித்திருந்தனர்.
மேலும் அந்த அறிக்கையில் க/பெ ரணசிங்கம் படத்தின் இயக்குனர், எழுத்தாளர் இருவரும், தைரியம் இருந்தால் நேரலை விவதாம் செய்யலாமா என்று மாறனுக்கு சவால் விட்டிருக்கின்றனர்.