
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நித்யா மெனன் ஆகியோர் நடிப்பில் புது படம் உருவாகிவருகிறது. இப்படத்தை பசங்க, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்குகிறார். இப்படம் கதைக்கு முக்கியத்துவம் கொண்ட, ஆறு முதல் அறுபது வரை அனைத்து தரப்பினரும் கண்டு களிக்கும் வகையில் உருவாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. மொத்த படப்பிடிப்பும் கடந்த பிப்ரவரியில் முடிந்தது. இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘தலைவன் தலைவி’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் ரக்கட் லவ் ஸ்டோரி என்ற டேக் லைனும் இடம் பெற்றுள்ளது. இசையமைப்பாளர் குறித்த அப்டேட் இதுவரை வெளியிடாத நிலையில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பது டைட்டில் டீசர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைட்டில் டீசரில், நித்யா மெனனை மகாராணி போல பார்த்துப்பேன் என கூறி தனது வீட்டிற்கு அழைத்து வரும் விஜய் சேதுபதி அவரை கொத்து பரோட்டா செய்ய பயன்படுத்துகிறார். அப்போது இருவரும் பேசிக்கொண்டே கொத்து பரோட்டா செய்ய நித்யா மெனன், இதுதான் நீங்க மகாராணி மாதிரி பார்த்துக்குற லட்சணமா என கேட்க அதற்கு விஜய் சேதுபதி, புடிக்கலைன்னா உங்க அப்பா வீட்டு அரண்மனைக்கு போங்க என சொல்ல இருவருக்கும் வாக்குவாதம் சூடுபிடிக்கிறது. இறுதியில் நித்யா மெனன் இதுக்கு மேல பேசுன மூஞ்சிய் பரோட்டா கல்ல வச்சு தேச்சிபுடுவேன் என விஜய் சேதுபதியிடம் சொல்ல உடனே விஜய் சேதுபதி வாயில் துண்டை கட்டிக்கொண்டு மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இந்த காட்சி முடிந்ததும் யோகி பாபு, “காய்ஸ், அவங்க நம்மள மாதிரி நார்மல் பீப்பில் கிடையாது, சொன்னா புரிஞ்சிக்குங்க” என வசனம் பேசுகிறார். பின்பு கையில் துப்பாக்கியுடன் விஜய் சேதுபதி காட்சியளிக்க தொடர்ந்து கதைக்களம் சீரியஸ் மோடில் செல்கிறது. பின்பு அது தொடர்பான சில காட்சிகளும் இடம் பெற்று வீடியோ முடிகிறது.