
ஸ்டூடியோ மூவிங் டர்டில் மற்றும் ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் இராம் இந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மனிதர்கள்’. இப்படத்தில் அறிமுக நடிகர்கள் கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, முன்னணி திரைப்பிரபலங்கள் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் பாபி சிம்ஹா, நடிகர் சந்தோஷ் பிரதாப் மற்றும் தயாரிப்பாளர் சி.வி. குமார் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
சகதிக்குள் மல்லுக்கட்டும் மனிதர்களை வித்தியாசமான களத்தில், காட்சிப்படுத்தியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து த்ரில்லர் ஜானரில் இப்படம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் குறித்து இயக்குநர் இராம் இந்திரா கூறியதாவது, “இது நண்பர்களின் உதவியால், கிரவுட் ஃபண்டிங் முயற்சியில் உருவான திரைப்படம். மனிதனின் மனம் வித்தியாசமானது, நொடிக்கு நொடி மாறும் தன்மை கொண்டது. அதன் உணர்வுக்குவியல்களை திரையில் கொண்டு வரலாம் என்ற எண்ணத்தில் உருவானது தான் இந்தப்படம். ஒரு இரவில் ஒன்று சேர்ந்து மது அருந்தும் ஆறு நண்பர்கள், அடுத்த ஆறு மணி நேரத்தில், அவர்களுக்கும் ஏற்படும் ஒரு சிறு பொறி, எப்படி பெரும் பிரச்சனையாக வெடிக்கிறது என்பதை, பரபரப்பான திரைக்கதையில், ரசிகர்கள் ரசிக்கும் திரில்லராக உருவாக்கியுள்ளோம்.
இது முழுக்க இரவில் நடக்கும் கதை, இதுவரை திரையில் பார்த்த இரவாக இது இருக்காது, நீங்கள் நேரில் அனுபவிக்கும் இரவின் நிறத்தைத் திரையில் கொண்டு வந்துள்ளோம். திண்டுக்கல் என் சொந்த ஊர் என்பதால் அங்கேயே முழுப்படப்பிடிப்பும் நடத்தி முடித்தோம். என் ஊர் மக்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்” என்றார். இப்படத்தின் முழுப்பணிகளும் முடிந்த நிலையில், விரைவில் திரைக்குக் கொண்டு வரப் படக்குழு திட்டமிட்டுள்ளனர். திரையரங்கு வெளியீட்டுத் தேதி, விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.