சமீபத்தில் வெளியான செங்களம் வெப்சீரிஸ் பரவலான பார்வையாளர்களைச் சென்றடைந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பஞ்சாயத்து தேர்தல் அரசியல் களத்தினையும் அதை மையமிட்டு நடக்கும் பல விசயங்களை யதார்த்தமாக எடுத்துக் காட்டியிருப்பதாக விமர்சகர்களால் சொல்லப்படுகிறது. நக்கீரன் ஸ்டூடியோவிற்காக இந்த வெப்சீரிஸில் நடித்த வாணி போஜன் அவர்களை சந்தித்தோம். அப்போது அவர் பல்வேறு விசயங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
வாணி போஜன் பேசியதாவது “செங்களம் வெப்சீரிஸில் சிறந்த நடிப்பை வழங்க வேண்டும் என்கிற எண்ணம் முதல் நாளிலிருந்தே எனக்கு இருந்தது. நிறைய யோசித்து தான் இதில் நடிக்க முடிவு செய்தேன். கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அரசியல்வாதி கதாபாத்திரம் என்பதால் நான் பார்த்து வளர்ந்த அரசியல் கதாபாத்திரங்களை மனதில் வைத்து நடித்தேன்.
தொடர்ந்து எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் தான் வருகின்றன. நான் தொலைக்காட்சியில் இருந்து வந்ததால் ஆரம்பத்தில் என்னை சில ஹீரோக்கள் ரிஜெக்ட் செய்தனர். அதன் பிறகு அவர்களை நான் ரிஜெக்ட் செய்தேன். இப்போது சீரியலில் இருந்து வந்த நடிகை என்று என்னை யாரும் பார்ப்பதில்லை. சமீபத்தில் கவின் நடித்த டாடா திரைப்படம் மிக நன்றாக ஓடியது. அவருடைய நடிப்பை அவ்வளவு ரசித்தேன். டிவியில் இருந்து வந்து சிவகார்த்திகேயன் பெரிதாக சாதித்துள்ளார். இதுபோன்று பலர் வந்துள்ளனர். இதில் எனக்கு ஸ்ட்ராங்கான ஒரு பெண்ணின் கேரக்டர் அமைந்துள்ளது. பெண்ணுக்கான தடைகளை உடைக்கும் வகையில் அது இருக்கும்.” என்றார்.