அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடந்த 13ஆம் தேதி 61வது வயதில் அடியெடுத்து வைத்தார். இதனை முன்னிட்டு திருப்பூரில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மாராத்தான் போட்டி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் டி.டி.வி. தினகரன் மேடையில் பேசும்போது, கீழிருந்த மாணவர்கள், ‘கடவுளே... அஜித்தே...’ என்று கோஷமிட்டனர்.
இந்த கோஷங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் அஜித் குமார் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ‘கடவுளே...அஜித்தே...’என்ற கோஷம் அவரை கவலையடையச் செய்ததாகவும் அவரது பெயருக்கு முன்பு எந்த அடைமொழியையும் சேர்த்து அழைப்பதில் உடன்பாடில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும் அதை நிறுத்துவதற்கு ரசிகர்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்று சொல்லியிருந்தார்.
இந்த நிலையில் மாணவர்கள் கோஷமிட்டது குறித்து செய்தியாளர்களின் சந்திப்பில் டி.டி.வி. தினகரன் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “நான் அந்த நிகழ்ச்சியில் பேசும்போது மாணவர்கள் கோஷமிட்டனர். எனக்கு அது என்னவென்று சரியாக கேட்கவில்லை. உடனே அருகில் இருந்த பாதுகாவலரிடம் என்னவென்று கேட்டேன். அதற்கு அவர், கடவுளே அஜித்தே என சொல்வதாகவும் அது இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதாகவும் கூறினார். அதன் பிறகு நான் அங்கு பேசும்போது, மாணவர்கள் அமைதியாகிவிட்டனர். அதை தொலைக்காட்சிகளில் நான் அதிர்ச்சியானதாக செய்திகளை வெளியிட்டனர். ஆனால் நான் அதிர்ச்சியாகவில்லை. ஏனென்றால் நானே அஜித் குமாரின் ரசிகர் தான். அவரை எனக்கு பிடிக்கும். நான் நிறைய குழந்தைகளுக்கு அஜித் குமார் என பெயர் வைத்துள்ளேன். ஒரு நடிகராக அஜித் குமாரை எனக்கு பிடிக்கும் என பல பேட்டிகளில் பேசியிருக்கிறேன்.
சிவாஜி, எம்.ஜி.ஆர்., ரஜினி, கமலை எப்படி பிடிக்குமோ அதுபோல் விஜய், அஜித், விக்ரம், சூர்யா என எல்லாருடைய படங்களும் பிடிக்கும்” என்றார். தொடர்ந்து சினிமா குறித்து பேசிய அவர், “தங்கலான் படத்தை ஓ.டி.டி.யில் பார்த்தேன் ரொம்ப அருமையாக இருந்தது. கங்குவா படம் இன்னும் பார்க்கவில்லை” என சிரித்துக்கொண்டு பதிலளித்தார். இதையடுத்து அவரிடம் விஜய்யின் அரசியல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், “விஜய் கட்சி தொடங்கி கொள்கை கோட்பாடுகளை சொல்லியிருக்கிறார். அதில் கருத்து சொல்வது நாகரீகமாக இருக்காது. எங்களைப் பற்றி யாராவது விமர்சனம் செய்தால் பதில் விமர்சனம் செய்ய முடியும். நாங்களாக வழிய சண்டைக்கு போக மாட்டோம் வந்த சண்டையை விடமாட்டோம். மக்கள்தான் இறுதி எஜமானர்கள். அவர்கள்தான் வரும் தேர்தலில் யார் உள்ளே, வெளியே என்று முடிவு செய்வார்கள்” என்றார்.