ரஜினியின் தர்பார் படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் 23ஆவது படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர் முருகதாஸ். இப்படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்க அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தை இயக்கிக் கொண்டே, பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற தலைப்பில் ஒரு படமெடுத்து வருகிறார். முதல் முறையாக சல்மான் கானும் ஏ.ஆர்.முருகதாஸும் கூட்டணி வைத்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சஜித் நதியாத்வாலா தயாரிக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், பிரதீக் பாப்பர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் அடுத்த ஆண்டு ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இப்படத்தின் சிறப்பு முன்னோட்ட வீடியோ சல்மான் கான் பிறந்தநாளான டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் பின்னணி இசையை கவனிப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் பாலிவுட்டில் கால் பதிப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்பு இறுதிச்சுற்று பட இந்தி வெர்ஷனில் பாடலுக்கு மட்டும் இசையமைத்திருந்தார். இப்போது அவர் தமிழில் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் இன்னும் பெயரிடாத படத்தில் பணியாற்றி வருகிறார். கடைசியாக தெலுங்கில் பிரம்மாண்ட பொருட்செலவில் படமாக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் வெளியான கல்கி 2898 ஏ.டி. படத்திற்கு இசையமைத்திருந்தார்.