திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 1ஆம் தேதி முதல் பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் கடந்த 16-ந்தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி தமிழகம் மற்றும் புதுவையில் சினிமா காட்சிகளையும் ரத்து செய்து தியேட்டர் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கியது. இந்நிலையில் தியேட்டர் உரிமையாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கடந்த 23ஆம் தேதி தமிழகத்தில் மட்டும் போராட்டம் கைவிடப்பட்டு தியேட்டர்கள் இயங்கி வருகின்றன.ஆனால், புதுவையில் உள்ள தியேட்டர்கள் தொடர்ந்து மூடப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. மாநில அரசு சார்பில் விதிக்கப்படும் 25 சதவீத கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுவையில் இந்த போராட்டம் நீடித்து வந்தது. இதையடுத்து தியேட்டர் உரிமையாளர்களில் ஒரு தரப்பினர் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயத்தை சமீபத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது கேளிக்கை வரியை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.இதையடுத்து கேளிக்கை வரியை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதையொட்டி வருகிற 30ந்தேதி முதல் தியேட்டர்களை திறக்க உள்ளதாக புதுவை தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
Published on 29/03/2018 | Edited on 31/03/2018