குணச்சித்திர வேடங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகர் தம்பி ராமையா மனுநீதி, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் ஆகிய படங்களின் டைரக்டரும் ஆவார். இந்நிலையில் இவருடைய மகனும் தற்போது தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். 'அதாகப்பட்டது மகாஜனங்களே' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆன இவர் தற்போது தன் தந்தை தம்பி ராமையா இயக்கத்தில் 'மணியார் குடும்பம்' என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இதையடுத்து இப்படத்திற்கு இசையமைக்கும் கூடுதல் பொறுப்பையும் ஏற்ற தம்பி ராமையா இப்படம் குறித்து பேசும்போது.... "இது வாழ்ந்து கெட்ட ஒரு குடும்பத்தை பற்றிய கதை. ஒரு குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவத்தை கருவாக வைத்து திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. வேலை எதுவும் செய்யாமல் ஊர் சுற்றும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அவள் வந்த பின் அவனுடைய வாழ்க்கை எப்படியெல்லாம் மாறுகிறது என்பதே கதை.
என் மகன் உமாபதி நடித்துள்ள 2 வது படத்தையும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காக ஐந்து மாதங்களாக நான் நடிக்கவில்லை. இதில் உமாபதி ஜோடியாக கேரளாவை சேர்ந்த மிருதுளா மேரி நடித்துள்ளார். சமுத்திரக்கனி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ராதாரவி, ஜெயப்பிரகாஷ், சிங்கமுத்து, சிங்கம்புலி, மொட்ட ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, ஸ்ரீரஞ்சனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். மேலும் நான் முதன்முறையாக இசையமைத்திருக்கும் இப்படத்தில் டி.இமான் ஒரு பாடலை பாடியிருக்கிறார். "என் மனசுக்குள்ள நீ புகுந்து...'' என்று தொடங்கும் அந்த பாடலை ரூ.40 லட்சம் செலவில் அரங்கு அமைத்து படமாக்கியிருக்கிறோம். சென்னை, புதுக்கோட்டை, அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. தந்தை, மகன் இடையேயான பாசப் பிணைப்பை சொல்லும் படம், இது. இதில் நானும், உமாபதியும் தந்தை, மகனாகவே நடித்து இருக்கிறோம். இந்த படத்தை எல்லோரும் பார்க்கும் வகையில் தணிக்கை குழுவினர், `யு' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்" என்றார்.