சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் கங்குவா. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். மேலும் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். இவரும் இந்தப் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். இவர்களைத் தவிர்த்து யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படத்தின் க்ளிம்ஸ், டீசர், ட்ரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வருகிற 14ஆம் தேதி 38 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இதனால் படக்குழு தற்போது புரொமோஷனில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் 3டி ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கலந்து கொண்டு பேசியதாவது, “சிவா சார் மற்றும் டீம் சேர்ந்து 3 வருடங்கள் கடின உழைப்பைக் கொடுத்து கங்குவா படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இத்தனை பேரை வைத்து எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் படம் எடுத்து முடித்திருப்பது சாதாரண விஷயம் கிடையாது. நான் இதுவரை செய்த படங்களிலேயே குறைந்த டென்ஷனுடன் இருந்த படம் இதுதான். சூர்யா சாரின் உழைப்பு நிச்சயம் பேசப்படும். முழுப்படமும் நேற்று இரவுதான் பார்த்தேன். படம் பார்த்துட்டு எனக்கு தூக்கமே வரவில்லை. அந்தளவிற்கு மகிழ்ச்சி. அதே மகிழ்ச்சியோடு இந்த விழாவிற்கு கிளம்பி விட்டேன். படம் இந்த அளவுக்கு பிரம்மாண்டமாக வரக் காரணம் சூர்யா சாரின் அன்பான ரசிகர்கள்தான்.
சில நேரங்களில் டேய் பச்சை ட்ரைலர விடுடா... அப்டேட் கொடுடா என கேட்டனர். அதை கேட்கும் போது கொஞ்சம் அப்செட்டாக இருக்கும். ஆனால் அவர்களுடைய அன்புதான் எல்லாத்துக்கும் காரனம். 10,500- 11,500 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. தீபாவளிக்கு இந்தப் படம் வெளியாகியிருந்தால் நமக்கு 4000 ஸ்கிரீன்ஸ்தான் கிடைத்திருக்கும். பான் இந்திய அளவில் இந்தப் படத்திற்கு நல்ல ஓப்பனிங் இருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு இது அடுத்த வெலவல் பாய்ச்சலாக இருக்கும்.
ரசிகர்களுக்கு உறுதியாக ஒரு விஷயத்தை சொல்ல முடியும். யானை காட்டில் இருக்கும் அதோடைய பலம் வேறு. ஆனால் கோயிலில் இருக்கும் போது அது அமைதியாக இருக்கும். அதனால் யானையுடைய பலம் குறைந்துவிட்டதாக அர்த்தம் கிடையாது. அந்த காட்டு யானையுடைய பலத்தை 14ஆம் தேதி பார்ப்பீங்க” என்றார்.