![vzvszvzv](http://image.nakkheeran.in/cdn/farfuture/8csEh3Ea8pp6Cm6KLJa-utQM2mC2O1C2WHqEbhNYGJc/1618225306/sites/default/files/inline-images/Untitled_132.jpg)
இயக்குநர் ஏ.எல்.விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்து வருகிறார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்றதையடுத்து, இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து சமீபத்தில் ‘தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, ‘தலைவி’ திரைப்படம் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ‘தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதி கரோனா பரவல் காரணமாக தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கரோனா 2வது அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருவதால் பல மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. மஹாராஷ்டிராவில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு திரையரங்குகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பேன் இந்தியா படமான 'தலைவி' படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்து இருப்பதாகப் பட நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், தற்போது உள்ள சூழலைக் கருத்தில் கொண்டு திரைக்கு வரத் தயாராக இருந்த பல புதிய படங்களின் ரிலீசை தள்ளிவைக்க படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.