திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை திரையிடுவதற்கான சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 1ஆம் தேதி முதல் புதிய படங்களை திரைக்கு கொண்டு வருவதை நிறுத்தி பட அதிபர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதையடுத்து இந்த மாதம் திரைக்கு வர தயாராக இருந்த சிறிய மற்றும் பெரிய பட்ஜெட்டில் தயாரான 20 படங்கள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. இதனால் தியேட்டர்களில் பழைய படங்களையே மீண்டும் திரையிட்டு வருகிறார்கள். மேலும் 16-ந் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் நடக்காது என்றும், மற்றும் சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுவிட்டன. இந்த முழு வேலைநிறுத்தம் காரணமாக சினிமா துறையே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் தலைமையில் நடந்த அவசர கூட்டத்தில், சென்னையில் உள்ள தியேட்டர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. நாளை வழக்கம்போல் சென்னையில் உள்ள தியேட்டர்கள் மற்றும் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களும் இயங்கும். 147 தியேட்டர்களில் படங்கள் ஓடும். இந்த தியேட்டர்களில் வழக்கம்போல் 4 காட்சிகள் திரையிடப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து இந்த பிரச்சினை குறித்து ஆலோசிக்க தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்களின் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் திரையுலக பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டது. அரசாங்கத்திடம் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை பற்றி, எந்த சாதகமான பதிலும் வராததால், நாளை முதல் சென்னையை தவிர தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை காலவரையின்றி மூடுவதாக அறிவித்திருக்கிறார்கள்.
இதுபோல் இன்று முதல் சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் விஜய்யின் 62வது படம், தனுஷ், சூர்யா, விக்ரம், விஷால், கார்த்தி உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளன. தொடங்க இருந்த அஜித்தின் புதிய படம் உள்பட பல்வேறு புதிய படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. மேலும் வருகிற 23ந்தேதி முதல் வெளியூர், வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதனால் தமிழ்ப்பட உலகம் முழுவதும் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. திரை உலகை நம்பி 2 லட்சம் பேர் நேரடியாக வேலை செய்கிறார்கள். 3 லட்சம் பேர் மறைமுகமாக வேலை வாய்ப்பு பெறுகிறார்கள். இந்த வேலைநிறுத்தம் காரணமாக 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழக்கிறார்கள் என்று திரைத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் ஸ்ட்ரைக் எப்போது முடிவுக்கு வரும் என்று தொழிலாளர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.