அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘லப்பர் பந்து’. தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் சஞ்சனா, சுவாசிகா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன், டி.எஸ்.கே. உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 20ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் தமிழரசன் பச்சமுத்து, ஹரிஷ் கல்யாண், சுவாசிகா, டி.எஸ்.கே. உள்ளிட்ட படக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழரசன் பச்சமுத்து பேசுகையில், “இந்த படம் நினைத்ததைவிட கமர்சியலாக வெற்றிபெற சோசியல் மீடியாதான் காரணம், அதற்கு நன்றி. நான் இந்த படத்தில் வேலை செய்யும்போது 20 நாளுக்கு மேல் பட்டினி கிடந்தேன். அதேபோல் என்னுடைய டீமில் ஒருவரான அசோசியேட் எடிட்டரும் என்னுடன் பட்டினியில் இருந்தார். அந்தளவிற்கு என்னுடைய டீம் எனக்கு ஆதரவாக இருந்தது. தினேஷ் என்னிடம் 15 நிமிடம்தான் கதை கேட்டார். முதலில் இந்த படத்தில் உங்களுக்கு இரண்டு அதிர்ச்சி தரும் விஷயங்கள் இருக்கு என்றேன். முதல் விஷயம் இந்த படத்தில் அவருக்கு 40வயதிற்கு மேல் இருக்கும் என்றேன். அடுத்த விஷயம் துர்கா கதாபாத்திரத்திற்கு அப்பாவாக நடிக்க வேண்டும் என்றேன். இதைக் கேட்ட தினேஷும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஒருவேளை விஜயகாந்த் சார் ரசிகராக இந்த படத்தில் வருவதால் ஒப்புக்கொண்டாரோ என்னவோ என நானே புரிந்துகொண்டேன். என்னுடைய எழுத்திற்கு உயிர் கொடுத்தற்கு அவருக்கு நன்றி. சுவாசிகா இந்த படத்தில் மிகவும் நன்றாக நடித்திருந்தார். அவரிடம் நான் கதை சொல்லும்போது ‘தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரீ வேண்டும் உங்களை நம்பிதான் படத்தில் நடிக்க வருகிறேன்’ என்று என்னிடம் கூறினார். தினேஷ் மற்றும் சுவாசிகா இருவரும் ஏதோ ஒன்று கிடைக்காமல் இருந்தனர். இந்த படத்தின் மூலம் அவர்களுக்கு அது கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.
இந்த கதை முதலில் ஹரிஷ் கல்யாணிடம்தான் சொன்னேன். அவரும் உடனே ஒப்புக்கொண்டார். அவரை சாப்பிடவிடாமல்கூட வேலை வாங்கியிருக்கிறோம். நிறைய கஷ்டப்படுத்தியும் இருக்கிறோம். இது எல்லாம் கதைக்கு தேவைப்பட்டதால்தான் கஷ்டப்படுத்தினோம். ஹரிஷ் கல்யாணை நிறைய டார்ச்சர் பண்ணி இருக்கிறேன். ஆனாலும் முகம் சுழிக்காமல் நடித்து கொடுத்தார். சஞ்சனா கதாபாத்திரத்தை எழுதும்போது சரியான விதத்தில் ரசிகர்களை சென்றடையுமா என்ற டவுட் இருந்தது. இருந்தாலும் சஞ்சனா சிறப்பாக நடித்து கொடுத்தார். அதேப் போல் இந்த படத்தின் மற்ற டெக்னீசியன்களும் நல்ல முறையில் வேலை செய்து கொடுத்தார்கள். இந்த படத்தில் டி.எஸ்.கே. நடிக்க அவராகவே முன்வந்து தனக்கு வெற்றி தேவைப்படுகிறது அதற்காக என்ன வேண்டுமானாலும் பண்ண ரெடியாக இருப்பதாக சொன்னார். அவர் ஆசைப்பட்டபடி எல்லாமே நடக்கும். இந்த படத்தில் நடித்தவர்கள் நிறை ஆசைகளை மனதில் வைத்துள்ளார்கள். அவர்கள் எல்லோரும் அடுத்த கட்டதிற்கு போகவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்த படத்தை இன்னும் பெரிய அளவிற்கு கொண்டு போனதில் ஷான் ரோல்டனின் பங்கு அதிகம். இந்த படத்திற்கு இப்படி ஒரு ஆதரவு கிடைக்கும் என நினைத்துகூட பார்க்கவில்லை. என்னைபோல அடுத்து வரும் அறிமுக இயக்குநர்களுக்கும் ஆதரவளியுங்கள்” என்று பேசினார். அவர் ஒவ்வொருவரைப் பற்றி பேசும் போது சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகள் ஆனந்த கண்ணீர் விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.