![kochadaiyaan](http://image.nakkheeran.in/cdn/farfuture/FbdZoXbuRz5XnxfIRJXQui8szjEL0-LV4ytleWkwHCQ/1533347662/sites/default/files/inline-images/maxresdefault_40.jpg)
ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த முதல் அனிமேஷன் படமான 'கோச்சடையான்' படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியானது. ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கிய இப்படத்தின் தயாரிப்புப் பணிக்காக பெங்களூருவை சேர்ந்த ஆட் பீரோ என்னும் விளம்பர நிறுவனம் லதா ரஜினிகாந்த் இயக்குநராக உள்ள மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின் மென்ட் நிறுவனத்துக்கு ரூ.14.90 கோடி கடன் அளித்திருந்தது. இதையடுத்து படப்பிடிப்பு முடிந்தவுடன் வாங்கிய பணத்தை லதா திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்ததோடு வேறு நிறுவனத்திற்கு பட வெளியீடு உரிமையை வழங்கியதால் ஆட் பீரோ நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. இதையடுத்து வாங்கிய பணம் வட்டியுடன் ரூ. 8.70 கோடியை மட்டுமே திருப்பித் தந்ததாகவும், மீதம் ரூ.6.20 கோடி தொகையைத் தரவில்லை என்றும் ஆட் பீரோ நிறுவனம் குற்றம் சாட்டியது.
பின்னர் வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் லதா ரஜினிகாந்த் மீது புகார் அளித்தும் போதிய ஆதாரம் இல்லை என்று ஆட் பீரோ நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் அந்நிறுவனம் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் லதா ரஜினிகாந்துக்கு தொகையை திருப்பி தர 3 மாதங்கள் கெடு வழங்கப்பட்டது. இந்நிலையில் கொடுக்கப்பட்ட அந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து இந்த வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது லதா ரஜினிகாந்துக்கு நிலுவைத் தொகையை எப்போது தருவீர்கள் என்று சொல்ல வரும் 10-ந் தேதி வரை கெடு விதித்து இருக்கிறது. மேலும் அப்படி மீறும் பட்சத்தில் லதா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.