தெலுங்கின் முன்னணி காமெடியனாகவும், வில்லன் நடிகராகவும் வலம் வந்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. இவர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ஆறு படத்தில் ரெட்டி என்னும் கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அஜித்தின் ஆஞ்சநேயா மற்றும் தனுஷின் உத்தமபுத்திரன் படங்கள் மூலம் தமிழில் பிரபலமடைந்த நடிகர் ஜெயபிரகாஷ் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். 73 வயதான இவர் மேடை நாடகத்தில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர், பின்னர் தெலுங்கு திரையுலகில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் பணிபுரிந்துள்ளார். இவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி ஜெயபிரகாஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...
"ஜெய பிரகாஷ் ரெட்டியின் திடீர் மறைவு பற்றி அறிந்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். பல நல்ல தருணங்களில் அவருடன் பணியாற்றியுள்ளேன். பல தசாப்தங்களாக சில மறக்கமுடியாத நகைச்சுவை மற்றும் வில்லன் பாத்திரங்கள் மூலம் உங்கள் பல்துறைத்திறனுடன் எங்களை மகிழ்வித்ததற்கு நன்றி. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்" என கூறியுள்ளார்.