
தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்த நடிகை ஸ்ரீவித்யா கடந்த 2006ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக திருவனந்தபுரத்தில் காலமானார். கிட்டத்தட்ட 34 ஆண்டுகளாக இந்திய திரை உலகில் கோலோச்சினார். இந்நிலையில் ஸ்ரீவித்யாவின் கடைசி காலத்தில் அவரை கேரள நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கணேஷ்குமார் கவனித்து வந்தார். அவரது பாதுகாப்பில் தான் ஸ்ரீவித்யாவின் சொத்துக்கள் உள்ளன.ஸ்ரீவித்யாவுக்கு சென்னை அபிராமபுரம் சுப்பிரமணியபுரம் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு வீடு உள்ளது. தற்போது இதில் நடன பயிற்சி மையமாக செயல்பட்டு வருகிறது. இதையடுத்து இதன் வாடகை தொகையை ஸ்ரீவித்யாவின் வருமான வரி பாக்கிக்காக வருமான வரித்துறை வசூலித்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீவித்யாவின் வருமான வரி பாக்கித் தொகையை முழுமையாக கட்ட அபிராமபுரம் வீட்டை ஏலத்தில் விட வருமான வரித்துறை முடிவு செய்தது. இதனையடுத்து 1250 சதுர அடி கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கான ஏலம் வருகிற 27-ந் தேதி நடக்கிறது.அதன் உத்தேச மதிப்பு ரூ. 1 கோடியே 17 லட்சத்து 10 ஆயிரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்....'ஸ்ரீவித்யாவிடம் இருந்து வர வேண்டிய வருமான வரி பாக்கி, வட்டி ஏலச் செலவுத் தொகையை வசூல் செய்வதற்காக அவரின் வீடு ஏலம் விடப்படுகிறது' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.