சிவகார்த்திகேயன் நடிப்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் 'மிஸ்டர் லோக்கல்'. இப்படத்தில் நடிக்க தனக்கு பேசப்பட்ட ரூ.15 கோடி சம்பளத்தில் ரூ. 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தந்ததாகவும், மீதமுள்ள ரூ.4 கோடியை பெற்றுத் தர வேண்டும் எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் சம்பளப் பாக்கியை செலுத்தும் வரை ஞானவேல் ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்வதற்கும்; தியேட்டர், ஓடிடி வெளியீடு உரிமைகளை உறுதி செய்யவும் தடை விதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பிலிருந்து, சிவகார்த்திகேயன் கட்டாயத்தின் பேரில் தான் மிஸ்டர் லோக்கல் படம் எடுக்கப்பட்டது என்றும் அதனால் தங்களுக்கு ரூ. 20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் சிவகார்த்திகேயன் இது தொடர்பாக 3 ஆண்டுகளாக வழக்கு தொடராதது ஏன் எனக் கேள்வி எழுப்பியிருந்தது.
இதையடுத்து சிவகார்த்திகேயன் கொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பினரும் சமரசம் ஏற்படுத்திக் கொள்வதாகத் தெரிவித்தனர். இதனால் ஓய்வு பெற்ற நீதிபதி கிருபாகரனை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு வந்தபோது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பு சிவகார்த்திகேயனுக்கும் எங்களுக்கும் சமரசம் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவித்தது. மேலும் இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டதற்கான மனு சமர்ப்பிக்கப்பட்டது.