சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன் போட்டியில் கடந்த ஆண்டு சாம்பியனாக இருந்த சீன வீரர் டிங் லீரெனை எதிர்த்து இந்திய செஸ் வீரர் குகேஷ் (வயது 18) விளையாடினார். பரபரப்பான 14 சுற்று ஆட்டத்தில் டிங் லீரெனை வீழ்த்தி குகேஷ் அபாரமாக வெற்றி பெற்றார். அதாவது குகேஷ் தனது 58வது நகர்த்தலில் வெற்றி வாகையை சூடினார். இதன்மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன் பட்டத்தை பெற்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை குகேஷ் பெற்றார்.
இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் கடந்த கட்ந்த 17ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் குகேஷ்க்கு ஐந்து கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. இதையடுத்து சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் குகேஷுக்கு பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெங்கடாசலபதியின் தஞ்சாவூர் ஓவியத்தை பரிசளித்தார்.
இப்படி குகேஷை பலரும் பாராட்டி வரும் நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அப்போது அவருக்கு வாட்ச் ஒன்றை சிவகார்த்திகேயன் பரிசளித்துள்ளார். இந்த சந்திப்பில் குகேஷின் குடும்பத்தாரும் உடன் இருந்தனர். அப்போது குகேஷுக்கு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. முன்னதாக ரஜினியும் குகேஷை அழைத்து சால்வை அணிவித்து பாராட்டி புக் ஒன்றை பரிசாக அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.