எழுத்தாளர் இமையம் எழுதிய ‘பெத்தவன்’ என்கிற நெடுங்கதையை இயக்குநர் களஞ்சியம் இயக்க ஆதி திரைக்களம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'முந்திரிக்காடு'. இப்படத்தில் சீமான், புழல், சுபப்பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் பல்வேறு நபர்களும் கலந்துகொண்டு பேசினர்.
அப்போது சீமான் பேசுகையில், "இந்த படம் வெளியாக தாமதமாகி விட்டது. காதல் என்றும் இருக்கிறது; சாதி இன்றும் இருக்கிறது. அதனால் இந்த படம் எப்ப வந்தாலும் புதுமையாகத் தான் இருக்கும். படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்கள். பரியேறும் பெருமாள் முன்பு இந்த படம் வந்திருந்தால் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும். தாமதம் ஆனதற்கு பொருளாதார சிக்கல் தான் காரணம். தணிக்கை குழு நிறைய காட்சிகளை, குறிப்பாக நான் பேசிய வசனங்களை வெட்டிவிட்டனர். பெருமைக்குரிய நிகழ்வாக மாற்றிய பெருமக்கள் இங்கு இருக்கிறார்கள். அதில் ஒன்று பாலன் ஐயா. உழைப்பால் சாதித்துக் காட்டியவர். கொஞ்ச நாளாக அவரிடம் நான் சொன்னேன்... பயணச்சீட்டு போட்டு தாங்க என்று., நான் உங்களை தொல்லை செய்யவில்லை. ஏனென்றால் என் கடவுச்சீட்டை முடக்கி வைத்துள்ளார்கள். அவர், நன்றாக தூங்கி 40 ஆண்டுகள் ஆகிவிட்டது என சொல்லுவாங்க. அதையே தான் உங்க தம்பியும் அனுபவிச்சிட்டு இருக்கேன்.
நாம் தூங்குகிற நேரத்தில் ஃபோன் வரும். ஆஸ்திரேலியால பிரச்சனை.. அமெரிக்கால பிரச்சனை.. பிரான்ஸ்ல பிரச்சனை.. ஜெர்மனில பிரச்சனை... எல்லா நாட்டு பிரச்சனையும் என் பிரச்சனையா மாறி நிக்குது. அதற்காக என்ன செய்வது. இந்த இனத்தில் பிறந்துவிட்டோம். சில விஷயங்களை அனுபவித்து தான் ஆக வேண்டும். எனக்கு நடிக்க தெரியாது. என் இயல்பில் நான் இருப்பேன். இப்படம் சாதியத்துக்கு எதிரான ஒரு சாடல். சாதி எனும் கொடும் தீயினால் சமூகத்தில் நிகழும் தீங்கினை அழிப்பது தான் இந்த படம்" என்றார்.