கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சம்யுக்தா ஹெக்டே. இதனை தொடர்ந்து வாட்ச்மேன் மற்றும் பப்பி படங்களில் நடித்தார்.
டான்சராக இருக்கும் இவர், அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் டான்ஸ் வீடியோக்களையும், உடற்பயிற்சி வீடியோக்களையும் பதிவிடுவது வழக்கமாக வைத்திருக்கிறார்.
பெங்களூரில் ஒரு பார்க்கில் நடிகை சம்யுக்தா ஹெக்டே நண்பர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது அவரது உடை குறித்து அங்கிருப்பவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அவர் அணிந்திருந்த உடை, உடற்பயிற்சிக்கு அணியும் வகையிலான உடை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இருதரப்பினருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. சம்யுக்தாவின் நண்பரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவிதா ரெட்டி அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரலையாக பகிர்ந்து இந்த சம்பவம் குறித்து நியாயம் கேட்டுள்ளார். பின்னர் இந்த வீடியோ வைரலாக, அதனை தொடர்ந்து கவிதா ரெட்டி பகிரங்க மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.
இதனிடையே இன்ஸ்டாகிராமில் இதுகுறித்து ஒரு நீண்ட பதிவை பதிவிட்டுள்ளார். அதில், “எனக்கு கிடைத்து வரும் ஆதரவு, அன்பு, எனக்கான பதிவுகள், கிண்டல்கள், ட்வீட்டுகள் என அனைத்துக்கும் நன்றி. அவைதான் (எனது) இந்த குரலைப் பெரிதாக கேட்க வைத்திருக்கின்றன.
இந்த விஷயம் தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்த நீங்கள் அனைவரும் முக்கியப் பங்காற்றியுள்ளீர்கள். ஒரு சமூகமாக இது நமக்கு ஒரு பெருமை. நமது அழகான நகரத்திலோ, வேறெங்கோ கூட, ஒழுக்கத்தின் பெயரால் தடியைத் தூக்கும் இதுபோன்ற விஷயங்களைப் பொறுக்க முடியாது என்பதற்கான விழிப்புணர்வை இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி கொள்வோம். கவிதா ரெட்டியின் மன்னிப்பு திருப்திகரமாகவும், உண்மையானதாகவும் இல்லை. பொதுவில் மன்னிப்பு கேட்ட 16 மணி நேரம் வரை அவர் தனது பதிவுகளையோ, ட்வீட்டுகளையோ நீக்கவில்லை. இது இந்த மன்னிப்பை அவர் எவ்வளவு விளையாட்டாக எடுத்து கொண்டுள்ளார் என்பதையும், பொதுமக்கள் முன் தனது பெயர் பாதிக்கப்படுவதால், அதை காப்பாற்ற செய்திருக்கிறார் என்பதையும் காட்டுகிறது. இதையும் உங்களில் பலர் சுட்டிக் காட்டியுள்ளனர்.
ஆனால், இந்த பிரச்சனையில் அவர் மீது கவனம் செலுத்தாமல், நடந்த சம்பவத்தின் மீது கவனம் செலுத்த விரும்புகிறேன். இது, எல்லா இடங்களிலும் இருக்கும் பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்க சிறிய வழியை உண்டாக்கும் என்று நம்புகிறேன்.
எனது குடும்பத்துடன் நான் கலந்தாலோசித்தேன். கவிதா ரெட்டியின் வயதை மனதில் வைத்து அவருக்கெதிரான வழக்கை நான் தொடரப்போவதில்லை. அதில் ஆர்வமும் இல்லை. இதுகுறித்து நேற்று காவல்துறையினரிடமும் முறையாக கோரியுள்ளேன்.
ஆனால், ஒரு விஷயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அந்த பூங்காவில் எங்களை மிரட்டி, பயப்பட வைத்ததற்காக, அனில் ரெட்டி மற்றும் அவருடன் இருந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.
உலகில் யாருக்கும் நம்மைப் பயமுறுத்தும் உரிமை இல்லை. அதை இனிமேலும் சகிக்க முடியாது. மீண்டும் உங்கள் அனைவரின் ஆதரவுக்கு, எனது வழக்கறிஞர்களுக்கு என் நன்றி மற்றும் அன்பு. குறிப்பிட்டு நான் இருவரைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். அவர்கள் இந்த பிரச்சனை முழுவதிலும் எனக்கு ஆதரவளித்தனர். அது, எனக்கு ஆலோசனைகள், மன ரீதியான ஆதரவு அளித்த ஷ்ரத்தா மற்றும் என் பக்கம் உறுதுணையாக இருந்த பவன். உங்களை நான் நேசிக்கிறேன், நீங்களின்றி என்னால் இதை செய்திருக்க முடியாது.
கடைசியாக, ஆனால் முக்கியமாக எனக்கு பக்கபலமாக இருந்த என் குடும்பத்துக்கு நன்றி. உணர்வுரீதியாக எனக்கு ஆதரவளித்தனர். என்ன நடந்தாலும் என் பக்கத்தில் இருப்பேன் என்று உறுதியளித்தனர். ஒரு பெண்ணாக அது முக்கியமான ஆதரவு என நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.