தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது 'சாகுந்தலம்', 'குஷி' மற்றும் 'யசோதா' படத்தில் நடிக்கிறார். இதில் யசோதா படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் கடந்த 11 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதனிடையே, சமீபத்தில்தான் தசை அலர்ஜி மயோடிசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடையப் போராடி வருவதாகவும் விரைவில் நான் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள் எனவும் தெரிவித்திருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. மேலும், இது தொடர்பாக திரைப் பிரபலங்கள் பலரும் சமந்தாவுக்கு ஆறுதல் கூறினர்.
இதனைத்தொடர்ந்து அண்மையில் ஒரு பேட்டியில், "உயிருக்கு ஆபத்தான நிலையில் நான் இல்லை. இது ஒரு போர்க்களம். நான் போராடி வருகிறேன்" என உருக்கமாக கண்கலங்கியபடி பேசினார். இந்நிலையில் சமந்தா நேற்று (23.11.2022) உடல்நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இது தொடர்பாக சமந்தாவின் செய்தித்தொடர்பாளர் ஒரு ஆங்கில ஊடகத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "சமந்தா வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார். அவர் ஹைதராபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவலை நம்பவேண்டாம். அது வெறும் வதந்தி தான்" எனப் பேசியுள்ளார்.