சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி 38 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிவகுமார், கார்த்தி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சூர்யாவை வைத்து அடுத்து இயக்கவுள்ள ஆர்.ஜே, பாலாஜி கலந்து கொண்டு பேசுகையில், “சூர்யா 45 பட இயக்குநராக இங்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. காக்க காக்க படம்தான் நான் முதலில் நண்பர்களுடன் பார்த்த படம். அவருடன் ஒரு படம் பண்ண வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்கு ஒரே காரணம், சூர்யா சார் என்னுடைய கதை மேல் வைத்த நம்பிக்கை. இந்தப் படம் சூர்யா ரசிகர்களுக்கு மாஸான விருந்தாக இருக்கும். அதற்கு நான் கியாரண்டி.
அரசியல்வாதி என்றால் தேர்தலில் நிற்பது மட்டும் கிடையாது. தெருவில் மரம் விழுந்து கிடந்தால் அதை சரி செய்வதும் அரசியல்தான். அதே போல எல்லாருக்கும் எதாவது நல்லது பண்ண வேண்டும் என சின்ன சின்னதா பண்ணுகிற விஷயமும் அரசியல்தான். அந்த வகையில் சூர்யா அரசியல்வாதியாக மாறி ரொம்ப வருஷம் ஆகிறது. அந்த அரசியலே அவருக்கு போதும். மாற்றம் ஃபவுண்டேஷன் மூலம் படித்து பெரிய ஆளாக நிறைய பேர் மாறியிருக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களுக்கு எதாவது உதவி செயதால், அந்த விதை சூர்யா போட்டது. அதை பார்க்கும் போது சூர்யா அரசியலுக்கு வந்து 25 வருஷம் ஆகிவிட்டது. இதுக்கு பிறகு அவர் தனியாக வர வேண்டும் என நான் விரும்பவில்லை. இங்க இருந்து கொண்டே அவர் செய்வதை பெரிய விஷயமாக பார்க்கிறேன்.
அவர் பாலிவுட்டில் பிரபாஸ் மாதிரி நான் கிடையாது, ராணா மாதிரி கிடையாது என பேட்டி கொடுக்கிறார். ஆனால் அவர்களை விட சூர்யா மேலானவர்தான். அவருடைய உழைப்பு எங்களுக்கு தெரியும். பாலிவுட்டில் எடுத்த கஜினியை விட இங்கு எடுத்த கஜினிதான் எனக்கு பிடித்திருந்தது. அங்கு சிங்கம் படம் ஆயிரம் கோடி என்கிறார்கள். ஆனால் இங்கு இருக்கிற சிங்கம் மாதிரி வராது. ஒருவர் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்தால்தான் மற்றவர்களை புகழ முடியும். அந்தளவிற்கு நம்பிக்கை ஆனவர் சூர்யா. சினிமாவிற்கு வெளியில் இருந்த போது நிறைய சினிமாவை விமர்சனம் செய்திருக்கிறேன். அப்போது ஜாலியாக இருக்கும். ஆனால் இப்போது கொஞ்சம் பயமாக இருக்கிறது. சூர்யா 45 படத்தை நன்றாக பண்ண வேண்டும். அது என்னுடைய பொறுப்பு” என்றார்.