தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் நடித்து இந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது தமிழில் தனுஷுன் குபேரா படத்திலும், தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் புஷ்பா 2 படத்திலும், இந்தியில் சல்மான் கானின் சிக்கந்தர் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் ரெயின்போ மற்றும் ‘தி கேர்ள் ஃபிரண்ட்’ ஆகிய தெலுங்கு படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா, இந்திய சைபர் க்ரைம் ஒருங்கிணைப்பு குழுவின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “நாம் டிஜிட்டல் உலகத்தில் வாழ்கிறோம். ஆனால் சைபர் க்ரைம் எல்லா நேரங்களிலும் அதிகமாக இருக்கிறது. சைபர் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர் என்ற முறையில், ஆன்லைன் உலகத்தைப் பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் நேரம் வந்துவிட்டது என நம்புகிறேன். நமக்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் பாதுகாப்பான சூழலை உருவாக்க ஒன்றிணைவோம். ஐ4சி(I4C)-க்கான பிராண்ட் அம்பாசிடராக நான் பொறுப்பேற்ற பின், இணையக் குற்றங்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதில் உங்களை முடிந்தவரை பாதுகாக்கவும் விரும்புகிறேன். 1930 என்ற எண்ணிற்கு சைபர் குற்றங்கள் குறித்து புகாரளிக்கலாம். அதற்கு அரசாங்கமும் நானும் உதவுவோம்” என்றுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பரில் ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ சமூக வலைத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ராஷ்மிகா மந்தனா கடும் மன வேதனை அடைந்தார். பின்பு மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை, போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை, குற்றம் நிரூபிக்கப்பட்டால், சிறைத் தண்டனையோடு ஒரு லட்சம் அபராதம் என உத்தரவிட்டது. மேலும் ராஷ்மிகா வீடியோ தொடர்பாக குற்றவாளி கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.