பெங்களூரில் கடந்த 2017ஆம் ஆண்டு, இசையமைப்பாளர் கால்வின் மஸ்கரென்ஹாஸ் உள்ளிட்ட இருவரிடம் ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருளை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த போதைப்பொருள் சம்பந்தமாகத் தெலுங்கு திரையுலகைச் சார்ந்த ரவி தேஜா, சார்மி கவுர், நவ்தீப், முமைத் கான், தனிஷ், நந்து, தருண் மற்றும் பாகுபலி புகழ் ராணா டக்குபதி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஒரு விருந்து நிகழ்ச்சியில் தெலுங்கு திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் போதைப்பொருள் பயன்படுத்தியதாகத் தகவல் வெளியானது.
இந்த போதைப்பொருள் பண மோசடி வழக்கு தொடர்பாக கடந்த நான்கு ஆண்டுகளாக விசாரணை மேற்கொண்டு வருகிறது அமலாக்கத்துறை. விசாரணையில் போதைப்பொருள் பயன்படுத்தியது மட்டுமின்றி கோடிக்கணக்கில் பணம் கைமாற்றப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பல நடிகர்களிடம் இது தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரகுல் ப்ரீத் சிங்கை அமலாக்கத்துறையினர் விசாரித்தனர்.
இந்த நிலையில், நடிகை ரகுல் ப்ரீத்சிங்கிற்கு வரும் 19ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சி எம்.எல்.ஏ. ரோஹித் ரெட்டிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.