கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியான படம் அமரன். தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருகிறது. முதல் நாளில் மட்டும் ரூ.42.3 கோடி வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து படம் உலகம் முழுவதும் மூன்று நாட்களில் ரூ.100 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ராஜ்குமார் பெரியசாமி படம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்திருந்தார். அப்போது படத்திற்கு வந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கையில், “மேஜர் முகுந்தின் மனைவி இந்து ரெபெக்கா வர்கீஸ் என்னிடம் முதன் முதலில் வைத்த ஒரு கோரிக்கை. முகுந்த் ஒரு தமிழர், அந்த கதாபாத்திரத்துக்கு ஒரு தமிழ் அடையாளம் கொண்ட ஒரு நடிகரை தேர்வு செய்யுங்கள் என்பதுதான். சிவகார்த்திகேயன் ஒரு அக்மார்க் தமிழனா எனக்குத் தெரிந்தார். அந்த காரணத்துக்காகத் தான் அவர் படத்துக்குள் வந்தார். அவர் வந்தது எவ்வளவு பெரிய பலம் என்பது எனக்குத் தெரியும்.
இந்து கோரிக்கை வைத்தது போல், முகுந்தின் பெற்றோரும் முகுந்த் எப்போதுமே தன்னை இந்தியன் என சொல்லிக் கொள்ளத்தான் ஆசைப்படுவான், சான்றிதழில் கூட எந்த வித குறியீடும் இருக்கக்கூடாது என்று நினைப்பான், அதனால் அவனுக்கு இந்தியன், தமிழன் என்ற அடையாளத்தை மட்டும் ஒரு ராணுவ வீரனாக கொடுங்க என கோரிக்கை வைத்தனர். அதையும் தாண்டி இந்த கலை பயணத்தில் ஒருவருக்கு அர்பணிக்கும் விதமாக ஒரு படத்தை எடுக்கிறோம். அவர் எந்த சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அது முக்கியமான விஷயமாக எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் முகுந்த் வீட்டுக்கு போகும் போது நாங்களும் அவர்களின் அடையாளங்களைக் கேட்டுக்கொள்ளவில்லை. அவர்களும் எங்களிடம் கேட்கவில்லை. இதையெல்லாம் தாண்டி முகுந்த் வரதராஜன் அசோக சக்ரா விருது பெற்றவர். அவர் ஆற்றிய சிறப்பான பணிக்கும், தியாகத்துக்கும் அமரன் படம் நியாயம் செய்திருக்கிறது என நம்புகிறேன்” என்றார்.
அண்மையில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்பாட்டத்தில் நடிகை மதுவந்தி, “முகுந்த் வரதராஜனை பிராமணர் என காட்டுவதில் என்ன கேடு. அப்படி மூடி மறைத்து ஏன் ஒரு படம் எடுக்கணும்? இயக்குநர் யாரை பார்த்து பயப்படுகிறார்” என கோவமாக பேசியிருந்தார். அதே ஆர்பாட்டத்தில் நடிகை கஸ்தூரியும் இதே கேள்வியை கேட்டிருந்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.