திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் கலைஞரின் பங்களிப்பைப் போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ விழாவை பிரம்மாண்டமாக நடத்த கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், திரையுலகின் மற்ற சங்கங்களுடன் இணைந்து ஜனவரி 6 ஆம் தேதி கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் ‘கலைஞர் 100’ விழாவிற்கான அழைப்பிதழை ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோருக்கு தமிழ் திரைப்பட சங்கங்களின் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வழங்கினர். இதற்கு முன்னதாக இந்த விழா கடந்த மாதம் 24ஆம் தேதி திட்டமிடப்பட்டு, மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கபட்டது. இதனால் ஏற்கனவே ரஜினி, கமலுக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கிய சங்க உறுப்பினர்கள் தற்போது நிகழ்ச்சி ஒத்திவைக்கபட்டுள்ளதால் மீண்டும் புதிய அழைப்பிதழை வழங்கினர்.