தெலுங்கில் தயாரிப்பாளராகவும் வினியோகஸ்தராகவும் வலம் வந்தவர் கே.பி.சௌத்ரி(44). ரஜினி நடித்த கபாலி படத்தின் தெலுங்கு பதிப்பை தயாரித்துள்ளார். மேலும் தமிழில் அதர்வா நடித்த கணிதன் படத்தை வினியோகம் செய்துள்ளார். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்த இவர், புனேவில் உள்ள இந்திய விமானப் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் செயல்பாட்டு இயக்குநராகப் பணியாற்றினார். 2016 ஆம் ஆண்டு, அந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நுழைந்தார்.
இவர் 2023ஆம் ஆண்டு போதைப் பொருள் வழக்கில் சிக்கினார். அப்போது அவரை சைதராபாத் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. இந்த நிலையில் இவர் கோவாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
தொழில் சம்பந்தமான பிரச்சனை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பொருளாதார சிக்கல் உள்ளிட்டவை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. அவரது உடலை கைப்பற்றிய போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தெலுங்கு தமிழ் சினிமா வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.