சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் வருகிற 23ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் கொட்டுக்காளி. இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நமது நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் இப்படத்தின் இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் மற்றும் கதாநாயகன் சூரியை சந்தித்தோம். அப்போது வினோத், இப்படத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
இயக்குநர் வினோத் பேசுகையில், “சிறந்த இயக்குநர் ஆவது எப்படி? என்று என்னிடம் கேட்பது ஒரே மாதத்தில் ஆங்கிலம் கற்றுக்கொள்வது எப்படி என்று சொல்லுவதுபோல் உள்ளது. நான் இந்த படத்திற்கு என்ன தேவையோ அதைத் தெரிந்துகொண்டேன். திரைக்கதை என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொண்டு அதில் இலக்கியங்களின் உதவியுடன் இங்கு இருக்கும் படங்களை பார்த்தும், வெளியிலுள்ள படங்களைப் பார்த்தும் நான் என்ன படத்தை எடுக்க போகிறேன் என்பதை யோசித்தும் வேலை செய்து வருகிறேன். சிறந்த இயக்குநராக ஆக வேண்டும் என நான் படம் பண்ணவில்லை.
சூரியிடம் இயல்பாகவே யதார்த்தம் உள்ளது. அவர் என்னுடைய கூழாங்கல் படத்தை பார்த்து பாராட்டினார். அது மிகவும் நெருக்கமாக இருந்தது. இந்த படத்தில் வரும் பாண்டி கதாபாத்திரத்தின் அகத்தையும் புறத்தையும் தெரிந்துகொண்டு கண்டிப்பாக நடிக்க ஒப்புக்கொள்வார் என்று நினைத்தேன். அப்படித்தான் அவரை இப்படத்தில் தேர்ந்தெடுத்தேன். சூரி, அன்னா பென் இருவர் மட்டும்தான் நடிகர்கள். மற்ற எல்லோரும் என் குடும்பத்தில் உள்ளவர்கள்தான். அவர்கள் நடிப்பதை பார்த்துவிட்டு என்னுடைய மற்ற உறவினர்கள் கோபப்படவில்லை. அதற்கு பதில் அவர்கள் இந்த படத்தில் நடித்தவர்கள் சொன்னதை வைத்து ‘பரவாயில்ல நாங்க வராமால் போனதே நல்லது” என்றனர்.
இப்படத்தில் என்னுடன் நாடகத்துறையில் பயணித்தவர்களும் இருக்கின்றனர். ஆனால், பெரும்பாலும் என் குடும்பத்தில் உள்ளவர்கள்தான் இருக்கிறார்கள். ஏனென்றால் காட்சியமைப்பு அதற்கு ஏற்றதுபோல் இருக்கும். அவர்கள் அனைவரும் சின்ன வயதிலிருந்து ஏதோ ஒரு வகையில் இந்த படத்தில் வரும் பாண்டி கேரக்டரை கடந்து வந்திருப்பார்கள். அதனால் அவர்களுக்கு இயல்பாக இந்த கதையில் தொடர்பு இருக்கும். அதனால் என் குடும்பத்தினரை இப்படத்தில் நடிக்க தேர்வு செய்தேன். அவர்களுக்கு ஆறு மாதங்கள் கேமரா இருப்பதை மறக்க செய்ய, தொடர்ந்து பயிற்சியளித்தேன். மற்றபடி அவர்கள் இயல்பாகவே கதாபாத்திரத்திற்கு ஏற்றவர்கள் போலத்தான் இருந்தார்கள். எனக்கு தனிப்பட்ட முறையில் குரு கிடையாது. ஆனால், எல்லோரையும் பார்த்தும் நான் கற்றுக்கொண்டேன். என்னுடைய ரசனை மேம்பாட்டிற்கு ஏற்றதுபோல் சில சமயம் அதுவே தானாக அமையும். அதனால் எனக்கு குரு என்று யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. அந்த வகையில் நிறைய நபர்கள் என்னை கைப்பிடித்து உயர்த்தியுள்ளனர்.
நான் இரண்டாவது படமே இப்படி எடுக்க காரணம் என்னுடைய சாந்தியம்மா, தேவி அத்தை, விஜயலட்சுமி அக்கா இவர்கள்தான். ஏனென்றால் அவர்களிடம் இருந்துதான் எனக்கு கதையே கிடைக்கிறது. அவர்களை ஏன் நான் கொட்டுக்காளி என்று சொன்னேன் என்றால், அவர்களுக்கு அந்த இடத்தில் நிறைய நெருக்கடி இருந்தும் தொடர்ந்து தைரியமாக பயணிக்கிறார்கள். அதனால் நான் அவர்களை கொட்டுக்காளி என்று சொல்லுவேன். கொட்டுக்காளி என்பது எங்களின் பேச்சு வழக்கில் இருக்கக்கூடிய சொல் தான். இங்கு இருக்கக்கூடிய கதையை உலக அளவில் பேச வைக்க வேண்டுமென்றால் இந்த இடத்தில்தான் படத்தை எடுக்கமுடியும்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நான் வேறு நடிகர்களை தேர்ந்தெடுத்து இந்த படத்தை பண்ணியிருப்பதை விட நமக்கானவர்களை வைத்து இந்த கதையை சொல்லுவதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்தேன். அது படம் பார்க்கும் போது உங்களுக்கு புரியும். என்னுடைய கூழாங்கல் படத்தை சூரி பாராட்டினதுபோல நிறைய எதிர்பார்க்காத நபர்கள் கூட கால் பண்ணி பாராட்டி பேசினார்கள். அவர்கள் எல்லோரும் அன்றாட வாழ்க்கையை போராடி பயணிப்பவர்கள். இந்த படம் பெர்லின் திரைப்பட விழாவுக்கு போய்ட்டு வந்ததால் இது அங்கு நடக்கும் கதை என நினைக்க வேண்டாம். இது நம்ம மக்களிடையே உள்ள மக்களுக்குக்காணக் கதை. இங்கு இப்படி இருக்கிறது என நாங்கள் அங்கு கொண்டுபோய் சேர்த்தோம் அவ்வளவுதான். அதனால் இது முழுக்க முழுக்க பார்வையாளர்களின் கதைதான்” என்றார்.