வி.எஸ் ராக்ஸ் என்ற அமைப்பின் சார்பாக சர்வதேச நடனத் தினத்தை முன்னிட்டு ‘நமது மாஸ்டர் நமது முன்னாடி’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி நடன இயக்குநர் பிரபு தேவாவிற்கு அர்பணிக்கும் விதமாகவும், அவரது 100 பாடல்களுக்கு 5000 மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் மற்றும் நடன கலைஞர்கள் தொடர்ந்து நடனமாடி உலக சாதனை படைக்கும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபு தேவா கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டு ஒவ்வொரு சிறுவர் சிறுமிகளிடமும் ஆயிரம் முதல் இரண்டாயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் மைதானத்தில் காலை 6 மணிக்கு தொடங்கி 7.30 மணிக்குள் முடிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில் 9 மணி கடந்தும் நிகழ்ச்சி தொடங்கப்படவில்லை. இதனால் அங்கிருந்த பெற்றோர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட தொடங்கினர். காலை உணவுக் கூட ஏற்பாடு செய்யாமல் உரிய நேரத்தில் நிகழ்ச்சியைத் தொடங்காமல் குழந்தைகளை வெய்யிலில் நிற்க வைத்துள்ளதாக கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
பின்பு அவசர அவசரமாக நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தொடங்கிய சிறிது நேரத்திலே பிரபு தேவா, வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைப் பாதியிலேயே அழைத்துச் சென்றனர். இதனையடுத்து பிரபு தேவா வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார். அது அங்கிருந்த பெரிய எல்.இ.டி அடங்கிய திரையில் ஒளிப்பரப்பட்டது.
அவர், தான் தற்போது ஹைதராபாத்தில் இருப்பதாகவும், தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வரமுடியாது எனவும் கூறினார். பின்பு வரமுடியாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்து பின்னர் ஒரு நாளில் நிகழ்ச்சி நடத்த தேதி கொடுத்திருப்பதாக தெரிவித்தார். உலக சாதனை நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சி பாதியிலே நிறுத்தப்பட்டதால் உலக சாதனை முயற்சி கைவிடப்பட்டு வெறும் பிரபு தேவாவிற்கு அர்ப்பணிப்பு நிகழ்ச்சியாக மாற்றப்பட்டுள்ளது.