Skip to main content

தனது மனநிலையை விவரித்த நலன் குமாரசாமி; சிரிப்பலையில் மூழ்கிய மேடை

Published on 03/12/2024 | Edited on 03/12/2024
Nalan Kumarasamy shares his experience working on the film Soodhu Kavvum

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘சூது கவ்வும்’. நலன் குமாரசாமி இயக்கியிருந்த இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘சூது கவ்வும் 2’ படத்தை எஸ்.ஜே.அர்ஜூன் இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருக்க அவருடன் இணைந்து கருணாகரன், ராதா ரவி, வாகை சந்திரசேகர், எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஷா  உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சி.வி.குமார் தயாரிப்பில் இப்படம் வருகிற டிசம்பர் 13ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் படக்குழுவினர்களுடன் இணைந்து இயக்குநர்கள் பா. ரஞ்சித், நலன் குமாரசாமி, ஆதிக் ரவிச்சந்திரன், கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அந்நிகழ்ச்சியில் நலன் குமாரசாமி பேசுகையில் “சூது கவ்வும் படம் பண்ணும்போது கிரேஸியான அனுபவமாக இருந்தது. அந்த படத்தை வெறும் 47 நாட்களில் எடுத்து முடித்தோம். படப்பிடிப்பில் நடந்த விஷயங்கள் எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லை. அந்தளவிற்கு பயங்கர வேகமாக படத்தை எடுத்து முடித்துவிட்டோம். இதையெல்லாம் தாண்டி படத்தின் வெற்றி மேஜிக் போல் நடந்து முடிந்தது. முதன் முதலில் ஸ்கிரிப்டை படிக்கின்ற தயாரிப்பாளரை நான் அப்போதுதான் பார்த்தேன். ஸ்கிரிப்ட்டை படித்துதான் சி.வி.குமார் படம் பண்ண தீர்மானிப்பார். அதே போல் அவர் ஆளையும் பார்த்து எளிதில் தீர்மானித்துவிடுவார். அவர் தீர்மானித்து எடுத்த முடிவுதான் சினிமாவில் இன்றைக்கு நிலையான இடத்தை மேடையில் உள்ளவர்கள் பிடித்திருக்கிறார்கள்.

இப்போது நானே டிவி-யில் என்னுடைய சூது கவ்வும் படம் பார்த்து நல்லா பண்ணீருக்காங்கப்பா என்று பாராட்டக்கூடிய மனநிலைக்கு வந்துவிட்டேன்” என்று அவர் சொன்னதும் மேடையில் இருந்தவர்கள் சிரிப்பலையில் மூழ்கினர். அதைத் தொடர்ந்து அவர், “இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை என்னிடம் கொடுத்திருந்தால் வித்தியாசமாகப் பண்ணி மாட்டியிருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் வேறு ஒரு ஆள் இந்த படத்தை இயக்கியது சாலச் சிறந்தது. சூது கவ்வும் படக்குழுவினர் கடுமையான உழைப்பைக் கொடுத்துள்ளனர். படம் வெற்றி பெற வாழ்த்துகள்” என்றார். 

சார்ந்த செய்திகள்