உலகளவில் இசைக் கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக நடைபெற்று வரும் 'கிராமி விருது', இசையுலகில் உயரிய விருதாகக் கருதப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த விருது விழா, இந்த ஆண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்துள்ளது. இந்த 66வது கிராமிய விருது விழாவில், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடல் ஆல்பம் உள்ளிட்ட பல பிரிவுகளில் பல்வேறு கலைஞர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உலகின் சிறந்த ஆல்பம் (Best Global Music Album) பிரிவில் இந்தியாவின் சக்தி இசைக்குழு வென்றுள்ளது. அக்குழுவின் ‘திஸ் மொமெண்ட்’ ஆல்பத்திற்கு இந்த விருது கிடைத்துள்ள நிலையில் சங்கர் மகாதேவன், செல்வகணேஷ், விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், ஜாகீர் உசேன் ஆகியோர் அடங்கிய இசைக்குழு இதில் பணியாற்றியுள்ளனர். இவர்களுக்கு பல்வேறு தரப்பினர் தற்போது வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த அகையில் ஏ.ஆர் ரஹ்மான், அந்த இசைக்குழுவிற்கு எக்ஸ் தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி சக்தி இசைக்குழுவிற்கு பாராட்டு கூறியுள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்த அவர், “இசையின் மீதான உங்களின் சிறப்பான திறமையும் அர்ப்பணிப்பும் உலக அளவில் அன்பை பெற்றுள்ளது. இந்தியா பெருமை கொள்கிறது. இந்த சாதனைகள் நீங்கள் உழைக்கும் கடின உழைப்புக்கு ஒரு சான்றாகும். இது புதிய தலைமுறை கலைஞர்களை பெரிய கனவு காணவும் இசையில் சிறந்து விளங்கவும் தூண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.