இந்தியாவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதுபெற்ற கேரளாவின் பிரபல இலக்கியவாதியும், தேசிய விருதுபெற்ற பாடலாசிரியருமான ஓ.என்.வி பெயரில் கடந்த 2017ம் ஆண்டு முதல் இலக்கியத்திற்காக சிறந்த பங்களிப்பைச் செய்பவர்களுக்கு ஓ.என்.வி விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஓ.என்.வி விருதுக்கு கவிஞர் வைரமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்விருதை மலையாளி அல்லாத கவிஞர் ஒருவர் பெறுவது இதுவே முதல்முறை. விருதுபெறும் வைரமுத்துவுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், இயக்குநர் பேரரசு வாழ்த்து தெரிவித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
"கவிப்பேரரசுக்கு
கிடைத்த ஓஎன்வி விருது
தமிழகத்துக்கு
கேரளம் தந்த அங்கீகாரம்!
மலையாளம்
தமிழுக்கு தந்த கௌரவம்!
கருத்த கவிஞரே
பெருத்த சந்தோஷம் தமிழருக்கு!
உன் குளத்தில் - சிலர்
கல்லெறிந்த காலம் வேறு!
இன்று
உன் குளத்தில்
பொற்தாமரை பூத்திருக்கு!
தமிழ் உன்னை வளர்த்தது
பதிலுக்கு நீயும்
தமிழ் வளர்க்கிறாய்!
நலிந்துகொண்டிருக்கும்
தமிழ்த்தாய்க்கு
சோறுபோடும் பிள்ளைகளில்
நீயும் ஒரு பிள்ளை
உனக்குண்டு
என்றும் தமிழ்த்தாயின் வாழ்த்து!" என வாழ்த்தியுள்ளார்.