இயக்கம் மற்றும் நடிப்பு என பயணித்து வரும் பார்த்திபன் இயக்குநராக டீன்ஸ் படத்தை கடைசியாக இயக்கியிருந்தார். நடிகராக பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்திருந்தார். இப்போது மலையாளத்தில் 11 வருடங்கள் கழித்து மீண்டும் அறிமுக இயக்குநர் கே.சி.கௌதமன் இயக்கத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் வந்தே பாரத் இரயிலில் உணவு சரியில்லை என தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பான புகார் கடிதத்தையும் பகிர்ந்திருந்தார். பின்பு இரயில்வே நிர்வாகம் பார்த்திபனின் புகாருக்கு வருத்தம் தெரிவித்தது.
இந்த நிலையில் பார்த்திபன், தனது தங்க நகைகள் மாயமானதாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். நந்தனம் விரிவாக்கம் பகுதியில் இவரது அலுவலகம் இருக்கும் நிலையில் அங்கு 12 சவரன் உள்ள ஒரு பையை வைத்துள்ளார். அந்த பையை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். இதனடிப்படையில் பார்த்திபன் அலுவலகம் மற்றும் அருகில் உள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
மேலும், அலுவலகத்தில் பணியாற்றும் 6 ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது பார்த்திபனின் உதவியாளர் கிருஷ்ணா என்பவர் நகையை திருடியதாக தெரியவந்துள்ளது. பின்பு அந்த நகை பார்த்திபனிடம் கொடுக்கப்பட்டது. உதவியாளர் கிருஷ்ணா பார்த்திபனிடம் மன்னிப்பு கேட்டதாகவும் பின்பு பார்த்திபன் தான் கொடுத்த புகாரை திரும்பப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.