காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பங்கேற்ற நிகழ்ச்சியில் விநியோகிக்கப்பட்ட அரசியலமைப்பு சாசன புத்தகத்தில் வெற்று காகிதம் மட்டுமே இருப்பதாக பா.ஜ.கவினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் பகுதியில் ராகுல் காந்தி தலைமையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அரசியலமைப்பு சாசன புத்தகம் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்படி விநியோகிக்கப்பட்ட புத்தக முன்பக்கத்தில், ‘இந்திய அரசியலமைப்பு’ என்று குறிப்பிட்டு புத்தகத்தின் உள்ளே வெற்று காகிதம் மட்டுமே இருப்பதாக பா.ஜ.கவினர் குற்றம்சாட்டி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து மகாராஷ்டிரா பா.ஜ.க தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘இந்திய அரசியல் சட்டத்தை இப்படி அழிக்க காங்கிரஸ் விரும்புகிறது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய அனைத்து சட்டங்களும் நீக்கப்படும். அதனால்தான் இடைக்கால இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று ராகுல் காந்தி கணித்திருந்தார்’ என்று பதிவிட்டுள்ளது.
பா.ஜ.க வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் மகாராஷ்டிரா காங்கிரஸ் கூறுகையில், ‘அரசியலமைப்புச் சட்டத்தின் அட்டையை வெற்றுப் புத்தகத்தில் போட்டு எவ்வளவுதான் பொய்யான செய்தியைப் பரப்ப முயன்றாலும், பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸ்ஸும்தான் உண்மையான அரசியல் சாசனத்தின் எதிரிகள் என்பது முழு இந்தியாவுக்கும் தெரியும்’ என்று தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பிரச்சாரம் மேற்கொண்டிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.கவை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அரசியலமைப்பு சட்டத்தை அழித்துவிடும் என்றும் அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டும் என்று ராகுல் காந்தி எப்போதும் தனது கையில் அரசியலமைப்பு சாசன புத்தகத்தை வைத்துக்கொண்டே பிரச்சாரம் மேற்கொண்டார். அவர், கையாண்ட அந்த விதம் மக்களவைத் தேர்தலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. மக்களவைத் தேர்தல் முடிவில் பெரும்பான்மைக்கு தேவையான இடம் கிடைக்காமல், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பா.ஜ.க மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.