இந்திய சினிமாவில் பல பயோ-பிக் படங்கள் வெளியாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு தற்போது படங்களாகவும், வெப் சீரிஸ்களாகவும் தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வாழக்கையைத் தழுவி படங்கள் எடுக்கப்பட்டன.
அந்த வரிசையில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் வாழ்க்கை படமாக உருவாகவுள்ளது. இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் ரவி ஜாதவ் இயக்க, உத்கர்ஷ் நைதானி கதை எழுதுகிறார். இப்படத்தில் பிரபல இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி வாஜ்பாய் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பானுஷாலி ஸ்டுடியோஸ் மற்றும் லெஜண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. மேலும், அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் படம் தொடர்பாக நடிகர் பங்கஜ் திரிபாதி, "இப்படிப்பட்ட மனிதாபிமான அரசியல்வாதியை திரையில் காட்டவுள்ளது எனக்கு பெருமை. அவர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் புகழ்பெற்ற கவிஞர். அவருடைய கதாபாத்திரத்தில் நடிப்பது என்னைப் போன்ற ஒரு நடிகருக்குக் கிடைத்த பாக்கியம்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகவுள்ளதாக அவர் மறைந்த அடுத்த ஆண்டு, அதாவது 2019ல் இதற்கான அறிவிப்பு வெளியானது. மேலும் ‘தி அன்டோல்ட் வாஜ்பாய்’ என்ற பெயரில் வெளியான புத்தகத்தைத் தழுவி, அதே பெயரில் படம் தயாரிக்கவுள்ளதாக தயாரிப்பாளர் ஷிவ ஷர்மா கூறினார். அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.