இந்திய சினிமாவில் காலத்தால் அழிக்கமுடியாத பாடல்களை பாடியவர் மூத்த பின்னணி பாடகி பி.சுசீலா. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட ஆறு இந்திய மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியதன் மூலம் கின்னஸ் சாதனை படைத்தார். இவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்திய அரசாங்கம், இவருக்கு 2008ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கியது. ஐந்து முறை தேசிய விருதுகளும் பதினொன்று மாநில விருதுகளும் இவர் வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் சேலத்தை மையப்படுத்திய தனியார் இசைக் குழுவின் 35-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவருக்கு அங்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. பின்பு பேசிய அவர், “என் உடம்பில் இப்போது சக்தியில்லை. இருந்திருந்தால் இன்றைய கால பாடகர்களுடனும் சேர்ந்து பாடுவேன். கோடம்பாக்கம் இப்போது தூங்குகிறது. நல்ல இசை இல்லை. பாடுபவர்களும் இல்லை. அதை நினைத்தால், ரொம்ப பரிதாபமாக இருக்கிறது. எம்.எஸ் விஸ்வநாதன், கே.வி மகாதேவன் இருந்த காலத்தில் ஸ்டுடியோவில் நுழைந்துவிட்டால் ஒரு குடும்பம் மாதிரி பாடுவோம்” என்றார். மூத்த பாடகியின் இந்த விமர்சனம் கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on 27/07/2024 | Edited on 27/07/2024