ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சைலன்ஸ்’. இந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருந்தது. தமிழில் இந்தப் படத்துக்கு ‘நிசப்தம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கோனா வெங்கட் மற்றும் விஸ்வ பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
வசனமே இல்லாமல் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் வெளியாவதாக இருந்தது. ஆனால், கரோனா வைரஸ் பரவலால் இதன் ரிலீஸ் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் படம் நேரடியாக 'ஓ.டி.டி.யில் வெளியாகிறது' என்றும் 'நேரடியாக திரையரங்கில் மட்டும்தான் வெளியாகிறது' என்றும் இருதகவல்கள் வெளியாகி, பலரைக் குழப்பி வந்தது. இந்நிலையில் ரிலீஸ் குறித்து வதந்திகள் உலவிக் கொண்டே இருந்த நிலையில், தயாரிப்பாளர் கோனா வெங்கட் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியுள்ளது.
" 'நிசப்தம்' வெளியீடு குறித்து ஊடகங்களில் நிறைய யூகங்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. திரையரங்கில் வெளியிடுவதற்குத் தான் நாங்கள் அதிக முக்கியத்துவம் தருகிறோம் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்” என்று முன்னர் தெரிவித்திருந்தார்.
கரோனா அச்சுறுத்தல் முடிவடையாததால், திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனிடையே தெலுங்கு திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான நானியின் 'வி' படம் ஓ.டி.டி.யில் ரிலீஸானதை தொடர்ந்து அடுத்தடுத்து பல தெலுங்கு படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், 'நிசப்தம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 2 -ஆம் தேதி காந்திஜெயந்தி அன்று 'சைலன்ஸ்' வெளியாக உள்ளது. மேலும் இந்தப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.