சசிகுமார் நடிப்பில் நாளை(20.09.2024) திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘நந்தன்’. ‘இரா’ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தை இரா.சரவணன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ஸ்ருதி பெரியசாமியும் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியும் வில்லன் கதாபாத்திரத்தில் பாலாஜி சக்திவேலும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ட்ரைலரை பார்க்கையில், தேர்தல் அரசியலில் எளிய மக்கள் போட்டியிட்டால், என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதை அழுத்தமான காட்சிகள் மற்றும் வசனங்களுடன் இந்தப் படத்தில் பேசியிருப்பதாக தெரிந்தது.
இதையடுத்து இப்படத்தின் பத்திரிக்கையாளர்களுக்கான சிறப்பு காட்சி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சசிகுமார், இரா. சரவணன், ஜிப்ரான், ஸ்ருதி பெரியசாமி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் பங்கேற்றனர். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர்களிடம் படம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது இரா.சரவணனிடம், “படத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் காட்டியுள்ளீர்கள், அவர் ஆட்சியில்தான் படத்தில் காட்டப்படும் பிரச்சனை நடக்கிறது என்று சொல்கிறீர்களா? இல்லை பிரச்சனை முடிந்து தற்போது நல்ல ஆட்சி நடக்கிறதாக சொல்ல வருகிறீர்களா” என்று ஒரு பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த சரவணன், “அப்படியெல்லாம் இல்லை. கதையின் காலகட்டம் 2024-ல் நடப்பதால், அவர் புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளோம். வேறு உள்ளர்த்தம் கிடையாது. படத்தில் காட்டும் பிரச்சனை எல்லா ஆட்சிலும் நடந்து வருகிறது” என்று சற்று கோவமாக கூறினார். இதையடுத்து “எல்லா ஆட்சியிலும் அந்த பிரச்சனை நடைபெறுவதால்தான் சீமானை புரமோஷனுக்கு அழைத்தீர்களா?” என்று கேள்வி எழுப்ப, “படத்தின் புரமோஷனுக்கு அவரை மட்டும் அழைத்துள்ளேன் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். பல பேருக்கு இந்த படத்தை போட்டு காண்பித்தேன். அதில் சீமானுக்கு இந்த படம் பிடித்ததால்தான் வந்தார்” என சரவணன் பதிலளித்தார்.
அதன் பிறகு “அ.தி.மு.க.விற்கு எதிராக மட்டும் படத்தில் சீன் இருப்பதாக” பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்க, இதற்கு சரவணன் பதிலளிக்கையில்,“அ.தி.மு.க. மட்டும் இல்லை தி.மு.க.வுக்கு எதிராகக்கூட சில கருத்துகளை சொல்லியுள்ளேன். அதேபோல் நா.த.க. சீமானையும் படத்தில் கிண்டலடித்துள்ளேன். விஜய் குறித்த அரசியல் காட்சிகளும் படத்தில் உள்ளது. யாரையும் அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக கிடையாது. சுற்றி நடக்கும் அரசியலில் நாம் எந்த பக்கம் போக வேண்டும் என்ற சிந்தனைக்குத்தான் அப்படி எடுத்தேன்” என்றார்.