Skip to main content

"கொம்பனுக்கு பிறகு இந்த களத்தை தொட்டிருக்கிறேன்" - முத்தையா

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

Muthaiah speech in Kathar Basha Endra Muthuramalingam trailer launch

 

முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் படம் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சித்தி இட்னானி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படம் ஆர்யாவின் 34வது படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். 

 

அதில் இயக்குநர் முத்தையா பேசுகையில், "இது எனது 8வது படம். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு உறவுகளை பற்றி சொல்லுவேன். இப்படத்தில் உறவுகளை தாண்டி நன்றியுணர்வு ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை சொல்லியிருக்கிறேன். ஏனென்றால் நன்றி என்ற ஒரு உணர்வு மனிதருக்கு இருந்தால் எந்த பாகுபாடும், வேறுபாடும் மனிதர்களுக்கிடையே இருக்காது. யாரோ ஒருவர் யாருக்கோ எங்கோ ஒரு இடத்தில் உதவி செய்திருப்பார்கள். அந்த உதவியை ஒவ்வொரு மனிதர்களும் மறக்காமல் இருந்தால் எல்லாருமே உறவுகளாக வாழ்வார்கள். இந்த விஷயத்தை அடிப்படையாக கொண்ட படம் தான் காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம். 

 

இப்படம் ராமநாதபுரம் பகுதியில் நடப்பது போன்று கதை எழுதியுள்ளேன். கொம்பன் படத்துக்கு பிறகு இந்த களத்தை தொட்டிருக்கிறேன். ஆனால் படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடத்தியுள்ளேன். அங்கு வாழும் இரு உறவுகளை பற்றி இப்படத்தில் சொல்லியிருக்கிறேன். இது யார் மனதும் புண்படும்படியாக இருக்காது. அதை எப்பவுமே நான் பண்ண மாட்டேன். இது எங்க அப்பா சொன்னது, அடுத்தவங்களுக்கு நல்லது பன்றோமோ இல்லையோ தீமை மட்டும் பண்ணிடக்கூடாது. அதையே தான் நானும் கடைபிடித்து வருகிறேன். அந்த வகையில் படம் எப்போதும் போல மண்வாசனையோடு மரபு மாறாமல் உறவுகளை பற்றியும் நன்றியுணர்வோடு மேன்மைப்படுத்தி பேசியிருக்கிறேன். 

 

நகரத்து படங்கள் நிறைய வருகிறது. சில நல்ல விஷயங்கள் கிராமத்திலும் இருக்கிறது. பெரும்பாலும் உறவுகளுக்குள் இருக்கும் விஷயம் எல்லாம் கிராமத்து படங்களில் மட்டும் தான் சொல்ல முடியும். அதனால் தான் அந்த களத்தை எடுத்துக்கிட்டு இருக்கேன். நகரத்துக்குள்ள படம் பண்ணனும்னு ஆசைப்படுகிறேன். அதற்கு சீக்கிரமாக வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்