இளையராஜா... நாற்பது ஆண்டுகள் கடந்தும் இந்த நாத தேவனின் இசையில் மூழ்கி மகிழ்கிறது தமிழகம். காதலை சொல்லவும் ராஜா பாடல், காதல் தோல்வியின் சோகத்தை கொண்டாடவும் ராஜா பாடல் என மூன்று தலைமுறைகள் கொண்டாடிய இசைஞானி இளையராஜா, 2010க்குப் பிறகு திரைப்படங்களுக்கு இசையமைப்பது குறைந்தாலும் நிற்கவில்லை. ஆனால் 80களிலும் 90களிலும் இவர் இசையமைத்த பாடல்களே நமக்குக் காலம் முழுவதும் கேட்டு ரசிக்கப் போதுமானவை. அந்தப் பாடல்களின் ரசிகர்கள்தான் இணையத்திலும் இளையராஜாவை கொண்டாடி வருகின்றனர். 'ராஜா சார்' என்ற வார்த்தை இவர்களின் வேதமாக இருக்கிறது.
மற்றொரு புறம், இளையராஜாவின் மேடைப்பேச்சுகளும் செய்தியாளர் சந்திப்புகளும் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இளையராஜாவின் கோபம் புகழ் பெற்றதாகிவிட்டது. தனது இசை நிகழ்ச்சிகளில் அவர் அவ்வப்போது கோபத்தை வெளிப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. இந்தக் குறைகள் மீம்ஸ்களாகவும், ட்ரோல்களாகவும், சீரியஸான முறையிலும் விமர்சிக்கப்பட்டாலும் இவை எதுவும் இளையராஜாவின் இசை கொண்டாடப்படுவதை தடுக்கவில்லை. எப்படி ரஜினிகாந்த், ஒரு பக்கம் 'தலைவர்' எனவும் 'சூப்பர் ஸ்டார்' எனவும் தனது சினிமாக்களுக்காகக் கொண்டாடப்பட்டும், இன்னொரு பக்கம் தனது அரசியல் நடவடிக்கைகளுக்காகக் விமர்சிக்கப்பட்டும் வருகிறாரோ அவ்வாறு இளையராஜா இரு விதமாக சமூக ஊடகங்களில் இருக்கிறார். 'தென்றல் வந்து தீண்டும் போது', 'புன்னகை மன்னன் நடன இசை' உள்ளிட்ட பல படைப்புகள் 2K கிட்ஸ் வரை சென்று சேர்ந்திருக்கின்றன.
தற்போதைய காலகட்டத்தில் உள்ள பல இயக்குனர்களும் இளையராஜாவை கொண்டாடி வருகின்றனர். கௌதம் மேனன், மிஷ்கின், லெனின் பாரதி போன்ற சில இயக்குனர்கள் அவருடன் பணியாற்றியும் வருகின்றனர். மிஷ்கின், எப்பொழுதும் ஒரு படி மேலே சென்று டைட்டிலில் இளையராஜாவின் பெயரை இயக்குனரான தனது பெயரை விட அதிக முக்கியத்துவம் கொடுத்தே போடுவார். மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துத் தயாராகியுள்ள 'சைக்கோ' திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். அப்படத்தின் 'உன்ன நெனச்சு நெனச்சு உருகி போனேன் மெழுகா' என்ற பாடல் 18 நவம்பர் அன்று யூ-ட்யூபில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் அந்தப் பாடல் கேட்பவர்களை உருக வைக்கும் காதல் பாடலாக அமைந்துள்ளது. பார்வையற்ற ஒருவனின் காதல் உணர்வை அழுத்தமாக எழுதியுள்ளார் பாடலாசிரியர் கபிலன். சித் ஸ்ரீராம் இந்தப் பாடலை பாடியுள்ளார்.
ஒரு இடைவெளிக்குப் பிறகு இந்தப் பாடல் இளையராஜாவின் ரசிகர்களுக்கு விருந்தாகவும் "இன்னமும் இப்படி உருக்குறாரே" என்று இன்றைய இளைஞர்களால் வரவேற்கப்பட்ட ஒன்றாகவும் அமைந்துள்ளது.