சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு, கௌரி ஜி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் போட். இப்படம் வருகிற ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக இப்படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் கௌரி ஜி கிஷன் ஆகியோரை சந்தித்தோம். அதில் இப்படம் குறித்த அனுபவங்கள் பற்றி நம்மிடையே இருவரும் பகிர்ந்துகொண்டனர்.
அப்போது எம்.எஸ்.பாஸ்கரிடம், இப்படம் பார்க்கும் ஆடியன்ஸை போட் எப்படி கரை சேர்க்கும்? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இப்படத்தின் கதாப்பாத்திரங்களுக்கு கரையில் என்ன சோதனை வந்தது? கடலினுள் ஏன் போனார்கள்? அதன் பிறகு அங்கு அவர்களுக்கு என்ன பிரச்சனை வந்தது? என அனைத்தையும் ஆடியன்ஸ் பார்க்கும்போது நிச்சயமாக டென்சன் ஏற்படும். முடிவில் பெரிய சந்தோஷத்தை கொடுக்கும், மனதிற்கு சில பாதிப்புகளையும் ஏற்படுத்தும். அந்த அளவிற்கு சிம்புதேவன் இக்கதையை உண்மைச் சம்பவத்திலிருந்து உருவாக்கியுள்ளார். நல்ல படம் பண்ணியுள்ளோம் என்று நிறைவாக உள்ளது” என்றார்.
அதன் பின்பு உங்களுக்கு யாருடன் ஒரு படகில் பயணிக்க ஆசை? என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தபோது, “கமல் அண்ணாவுடன் பயணிப்பேன். அவரிடம் நிறைய சினிமா பற்றிதான் பேசுவேன். இந்த ஷாட் இப்படி அந்த ஷாட் அப்படி என அவர் விவரிப்பதை ரசித்துக்கொண்டே இருப்பேன். அதில் சந்தேகங்கள் இருந்தால் கேட்பேன். அவரும் அதை சுவாரஸ்யமாக சொல்லுவார். அவரே பெரிய லெஜண்ட். ஆனால், அவருக்கே சில சந்தேகங்கள் வரும்போது யாரிடம் கேட்கிறோம் என்பதைப் பார்க்க மாட்டார் என்ன கேட்கிறோம் என்றுதான் பார்ப்பார், அதை தெரிந்தும் கொள்வார். நிறைய அனுபவங்கள் அவரிடம் இருந்தாலும் சின்னவர்கள், பெரியவர்கள் என்று வயது வித்தியாசமின்றி அனைவரிடமும் ஆர்வமாக கேட்டு தெரிந்துகொள்வார். அதனால்தான் நானும் அவரும் ஒரே போட்டில் போக வேண்டும்” என்றார்.
இப்போது வரும் படங்களில் துப்பாக்கி மற்றும் சண்டை காட்சிகள் அதிகம் உள்ளது. ஆனால், உங்கள் படங்களில் குடும்பங்கள் முகம் சுழிக்காமல் பார்க்கின்றனர். எப்படி அதைத் தேர்வு செய்கிறீர்கள்? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “வன்முறை மூலமாக எதைச் சாதிக்க போகிறோம். யாராவது ஒருவரிடம் நீங்கள் அன்பாக இருந்தால் அதன் மூலம் நிச்சயமாக சாதிக்கலாம். துப்பாக்கி கலாச்சாராம், அரிவாள் கலாச்சாரம் போன்ற வன்முறைகள் எல்லாம் பெரியவர்கள் சொல்வதுபோல இரண்டு பக்கமும் கூர் தீட்டப்பட்ட ஆயுதம். குத்து வாங்குபவனையும் அது காயப்படுத்தும். குத்துபவர்களையும் அது காயப்படுத்தும். அது வேண்டாம் அன்பாக இருப்போம். இது போன்ற கதைகளைத்தான் நான் தேர்வு செய்வேன், அப்படிபட்ட கதைகளை உருவாக்கி என்னிடம் சொல்லும் இயக்குநருக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
மேலும் அவர் படப்பிடிப்பு அனுபவங்களை பற்றி பகிர்கையில், “படப்பிடிப்பின்போது அங்குள்ள மக்கள் நிறைய அன்பு காட்டினார்கள். அவர்கள் எல்லோரும் கிறிஸ்தவ மக்கள். எனக்கு மத வேறுபாடுகள் கிடையாது. நான் அங்குள்ள சர்ச்சுக்கு சென்று வருவதை பார்த்து அவர்கள் சந்தோஷப்படுவார்கள். மறுநாள் என்னிடம் ‘என்னணே கோயிலுக்கு போயிட்டு வந்துடீங்களா’ என்று கேட்பார்கள். நான் அவர்களிடம் சிரித்து விளையாடிக்கொண்டிருப்பேன், அதை அவர்கள் மிகவும் விரும்புவார்கள். ‘நடிகர்கள் எல்லோரும் எப்படியோ இருப்பார்கள் என்று நினைத்தோம், ஆனால் நீங்கள் எங்களிடம் ஜாலியாக இருக்கிறீர்கள்’ என எல்லோரிடமும் சொல்லுவார்கள்” என்றார்.
மேலும் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட சாவால்களை பற்றி அவர் பேசுகையில் “இயக்குநர் ஒன்று எடுக்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருப்பார். ஆனால், அதை எடுக்க முடியாது. கடல் மிகவும் ஆபத்தானது, அமைதியாகத்தான் இருக்கும், திடீரென சீற்றம் அதிகமாகிவிடும். படகில் உட்காரமுடியாது. தம்பி சிம்பு தேவன் இக்கதையை தேர்வு செய்தது அவருக்கும் நடிகர்களுக்கும் மிகவும் சவாலாக இருந்தது” என்றார். பிறகு இப்படத்தில் நடித்த யோகி பாபு உடனான அனுபவங்களை பகிர்ந்த அவர், “யோகி பாபு ஆரம்ப காலத்திலிருந்து ‘அண்ணே... அண்ணே...’எனப் பழகியவர். திறமையான நல்ல நடிகர். இயல்பான மனிதன். தலைக்கனம் அவரிடம் கிடையாது. எல்லாரிடமும் இயல்பாக பழக கூடியவர்” என்று கூறினார்.