மலையாளத் திரையுலகில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளாவில் கடந்த 2017ஆம் ஆண்டு முன்னணி நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும் வழியில் பாலியல் கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்வலையை உருவாக்கியது. இந்த சம்பவத்தை அடுத்து படப்பிடிப்பு தளத்தில் நடிகைகள் மற்றும் வேலை செய்யும் அனைத்து நிலை பெண்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கடந்த 2018ஆம் ஆண்டு கேரள அரசு கமிஷன் அமைத்தது.
இந்த கமிஷன் 2019ஆம் ஆண்டு கேரள முதல்வரிடம் ஆய்வறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் அந்த அறிக்கை வெளியிடப்படாமல் இருந்த நிலையில் தகவல் உரிமை ஆணையத்தின் தலையீட்டால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில், நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் மலையாள திரையுலகில் பெருமளவு இருந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டு, மேலும் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து பல நடிகைகள் தங்களுக்கும் பாலியல் தொல்லை நடந்ததாக புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த புகார்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. மேலும் சம்மந்தப்பட்ட நடிகர்கள் சித்திக், எம்.எல்.ஏ. முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்டோர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தற்போது செய்தித்துரை அமைச்சர் சாமிநாதன் பதிலளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ் திரையுலகில் எந்த பாலியல் புகாரும் வரவில்லை. அப்படி வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இதனிடையே நடிகர் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலும், “நடிகர் சங்கத்திற்கு புகார் வந்தால் தகுந்த நடவடிக்கை எடுப்போம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.